சிறைக்குள் நாமலின் உயிருக்குப் பேராபத்து! – சி.ஐ.டியில் மொட்டு முறைப்பாடு.

சிறைச்சாலைக்குள்ளேயே கலவரமொன்றை உருவாக்கி அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உயிரைப் போக்குவதற்குச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி நேற்று சனிக்கிழமை சி.ஐ.டியில் இந்த முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் நீதித்துறையின் மீதும் சுயாதீன நிறுவனங்கள் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ சிறை பிடிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்பாகவே, சிறைக்குள்ளேயே கலவரத்தை ஏற்படுத்தி அவரது உயிரை மாய்க்கச் சமூக வலைத்தளங்கள் மூலம் திட்டமிட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைப் போன்றதொரு ஆபத்தான சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக எதிர்வரும் வியாழக்கிழமை நாடு முழுவதும் பிரம்மாண்டக் கூட்டங்களை நடத்தத் தயாராகி வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கும் இந்த அறிக்கைகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமிட்ட அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் செயற்படுவதற்கான தகவல்கள் சி.ஐ.டியிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்துவிடப் போவதில்லை. கடந்த 24 மணித்தியாலங்களில் கட்சிக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவு மூன்று மடங்காகப் பெருகியுள்ளது.

குறிப்பாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தை யாராவது தடுத்து நிறுத்த நினைத்தால், இலங்கை வரைபடத்திலிருந்து அனுராதபுரத்தை அழித்தால் மட்டுமே முடியும். திட்டமிட்டதை விடப் பல மடங்கு அதிகமான மக்களுடன் அந்தக் கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.