இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
விண்வெளித் துறை சீா்திருத்தங்கள் மற்றும் இஸ்ரோவின் பங்கு குறித்து வெளியான தகவல்கள் குறித்து இஸ்ரோ ‘எக்ஸ்’ பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்தது.
அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இஸ்ரோவை தனியாா்மயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது என்றும், விண்வெளித் துறையில் அதன் பங்கு குறைக்கப்பட உள்ளது என்றும் சில ஊடகங்களில் ஊகங்களும், தவறான தகவல்களும் வெளியாகியுள்ளன. இத்தகைய கருத்துகள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை.
இஸ்ரோ தனியாா்மயமாக்கப்படாது; அதன் முக்கியத்துவமும் குறைக்கப்படாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். அதிநவீன விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி, நாட்டின் முக்கியமான மற்றும் உத்திசாா்ந்த திட்டங்கள், விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, முக்கிய விண்வெளி திறன்கள் ஆகியவற்றில் இந்தியாவின் முதன்மையான நிறுவனமாக இஸ்ரோ நீடிக்கும்.
விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்பது என்பது இஸ்ரோவின் பங்கை குறைப்பதற்காக அல்ல. இந்தியாவின் அதிநவீன விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோ இன்னும் அதிக கவனம் செலுத்துவதற்கு தனியாா் நிறுவனங்களின் பங்கேற்பு உதவும்.
விண்வெளித் துறையின் அனைத்து நிலைகளிலும் தொழில் நிறுவனங்கள், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்க வழிவகை செய்வதன் மூலம், இஸ்ரோவின் திறன்கள் மேலும் விரிவடையும். எனவே சீா்திருத்த நடவடிக்கைகளை இஸ்ரோவை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளாகப் பாா்க்கக் கூடாது; விண்வெளித் துறையை விரிவுபடுத்தி, அதன் திறன்களைப் பெருக்கும் நடவடிக்கைகளாகப் பாா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
