பெண்கள், சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியுடன் சஜித் சந்திப்பு!

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ வங்ஜெல்லுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.

குறிப்பாக, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம், பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை ஒழித்தல், தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் பாலின சமத்துவத்துக்குப் பதிலளிக்கும் வகையிலான கொள்கை வகுப்பை உறுதி செய்தல் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இலங்கையின் அரசமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குள் பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதையும் பாதுகாப்பதையும் மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு வலியுறுத்தினார். அத்துடன், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை நாடாளுமன்றத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் நாடு முழுவதும் உள்ள சமூகங்களிடையே கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் சுகாதாரம், அதிகாரமளித்தல், பாலின சமத்துவம் மற்றும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வைச் சிவில் சமூகத்திற்கு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிபுணர்களுடன் இணைந்து தொடர்ச்சியான அறிவுசார் தகவல் பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது முன்வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி, இந்த வேலைத்திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப, நிபுணத்துவ மற்றும் சர்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகள் சார்ந்த ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் முழுமையாகத் தயாராகவுள்ளது என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.