பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘பூத களுவா’ வெட்டிக்கொலை! – ‘படோவிட்ட அசங்க’ மீது சந்தேகம்.
கொழும்பு, தெஹிவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கொஸ் மல்லி’ என்பவரின் மைத்துனரான ‘பூத களுவா’ என அழைக்கப்படும் நபர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை, ஓபன் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய நொருவரே இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், பாதாள உலகக் கும்பல் தலைவனான ‘கொஸ் மல்லி’ என்பவருடன் பல ஆண்டுகள் டுபாயில் தங்கியிருந்தவர் என்பதுடன், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் சில வாரங்களுக்கு முன்பே இலங்கை திரும்பியுள்ளார்.
நேற்று ஓட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலையானது மற்றொரு பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘படோவிட்ட அசங்க’ என்பவரின் தரப்பினரால் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
