வேலைவாய்ப்பு மாபியாவால் இஸ்ரேல் கனவுகள் கலைந்தன! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு.
தற்போதைய அரசின் பலவீனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கைகளாலும், செயற்றிறனற்ற செயற்பாடுகளாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மாபியா தீவிரமடைந்து, இஸ்ரேல் செல்லும் இளைஞர்களின் கனவுகள் கலைந்துவிட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ‘இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை லொட்டரி எதிர்பார்ப்பு ஐக்கிய அமைப்பினரைச்’ சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“இதற்குக்கூட நிர்மாணத் துறையைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 பேருக்காக நான் குரல் கொடுத்தேன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் உட்கட்டமைப்புத்துறைக்கு எந்தவொரு வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. வேலைகளுக்குச் செல்ல எதிர்பார்த்திருப்போர் பொலிஸ் அறிக்கைகள் மற்றும் தகுதிப் பரிசோதனைகளைப் பெற்றுக்கொண்டும் கூட அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தற்போது 560 பேர் இந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன், மேலும் 1,200 பேர் உட்கட்டமைப்பு லொட்டரி முறையில் காத்திருக்கின்றனர்.
அரசின் ஊடாக இந்த வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும்போது 10 இலட்சம் ரூபா போன்ற குறைவான தொகையே செலவாகும். ஆனால், தனியார் நிறுவனங்கள் ஊடாகச் செல்வதாயின் 35 இலட்சம் ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் பாரிய சுரண்டல்களும் சூறையாடல்களும் இடம்பெறுகின்றன. இந்த அநீதிக்கு எதிராக நான் எப்போதும் முன்நிற்பதுடன், சபா பீடத்துக்குள்ளும் சென்று இந்தப் பிரச்சினைகளை வலுவாக முன்வைப்பேன்.
முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, இந்தச் சுரண்டல் முறையை உடனடியாக ஒழித்து, 10 இலட்சம் ரூபா செலவில் இஸ்ரேல் செல்லும் வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுக்க வேண்டும். பொய் கூறும் அரசியலை நிறுத்திவிட்டு, இந்தப் பலவீனங்களை உடனடியாகத் திருத்திக்கொள்ளுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
இந்த அமைதி வழியிலான ஆர்ப்பாட்ட இடத்துக்கு நேரடியாக வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநீதிக்குள்ளாகி வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போரைச் சந்தித்து அவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.






