இலங்கைக்கு நெருக்கடி வரும்போது இந்தியா உறுதியாகத் துணை நிற்கும் – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி.

இலங்கைத் தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என்று இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தனது முதலாவது இலங்கைக்கான விஜயத்தின் போது கொழும்பில் இந்திய வம்சாவளியினருடன் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் இலங்கை அரசின் அமைச்சரவை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், மேற்கு மாகாண ஆளுநர் ஹனிப் யூசூப், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியாவின் சிரேஷ்ட சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறை வளர்ச்சிகள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து இரட்டிப்பாகி தற்போது சுமார் 4 டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், 2026 – 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றது. கடந்த 12 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் சுமார் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் பொருள்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி ரூ.45 இலட்சம் கோதியிலிருந்து ரூ.79 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மின்னணுப் பொருள்கள் மற்றும் கைப்பேசி உற்பத்தித் துறையில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய கைப்பேசி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. கைப்பேசி ஏற்றுமதி கிட்டத்தட்ட 163 மடங்கு அதிகரித்து ரூ.2.6 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வெறும் ரூ. 600 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை மட்டுமே ஏற்றுமதி செய்த நிலையில், தற்போது அது வரலாறு காணாத அளவான சுமார் ரூ.39,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2013 – 2014 நிதியாண்டில் சுமார் ரூ.2 இலட்சம் கோடியாக இருந்த பாதுகாப்பு பட்ஜட், 2025 – 2026 நிதியாண்டில் ரூ.7.25 இலட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலனாக சுமார் 25 கோடி இந்தியர்கள் வறுமையின் சுழற்சியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை 25 கோடியிலிருந்து தற்போது சுமார் 95 கோடியாக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் நேரடி நிதிப் பரிமாற்றம் மூலமாக மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை ரூ.51 இலட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.” – என்றார்.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்து குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இரு நாடுகளின் மக்களுக்கும் இடையே பாலமாகச் செயற்படும் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பையும் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.