கண்மணியே பேசு…

கண்மணியே பேசு…

பாகம்: ஆறு

கோதை

அரங்கெங்கும் விருந்தினர்களால் கதிரைகள் நிறைக்கப்பட்டு,  இந்தியாவில் இருந்து பிரத்தியேகமாக வாங்கப்பட்டு, மிகுந்த சிரத்தையுடன் அலங்கரிக்கப்பட்ட மல்லிகைச் சரங்களின் வாசனை இதமாகப் பரவிக் கொண்டிருந்தது. இன்னும் நாட்டிய அரங்கேற்றம் ஆரம்பிக்காததால் மெல்லிய இருளும் வெளிச்சமும் கலந்திருந்த அந்த மேடையில் தன்னைத் தாண்டிப் போன அனைத்து புடவைகளையும்  அணைத்து விடத் துடித்த மிருதங்க வித்துவானுக்கு கைகள் காற்றிலேயே மிருதங்கம் அடித்தன.

அந்த நேரம் பார்த்து எல்லா வசதிகளும் எல்லாருக்கும் சரியாய் இருக்கிறதா எனச் சரி பார்ப்பதற்காக மேடையில் ஏறிய பெண்மணிக்கு கழுத்து தெரியாமல் தங்க நகையால்  மூடப்பட்டு, அவருக்கு  மூச்சு வாங்கியது. பட்டுப் புடவையைச் சரி பார்த்தவருக்குத்  தற்செயலாய் மிருதங்க வித்துவானின் கண்களில் தெரிந்த ஒரு வித போதையைப் பார்த்து, தன்னுடைய கண்களில் தான் ஏதோ தவறு இருக்கும் என்று நினைத்தவாறே அவரைக் கடந்து சென்றாள்.

“என்ன மச்சான் இது சரிப்பட்டு வராது போல ?” ஏக்கத்துடன் அடங்கிய குரலில் கேட்டுவிட்டு வயலின் வித்துவானை அண்ணாந்து பார்த்த குள்ளமான மிருதங்க வித்துவானுக்கு வண்டியும் தொந்தியுமாய் நூறு கிலோவில் சதையாடியது.

“இதுக்கெல்லாம் சளைக்கப்படாது ராசா, பத்தைத் தட்டிப் பார்த்தால் தான் ரெண்டு மூண்டு எண்டாலும் விழும்!

வயலின் வித்துவான் நமுட்டுச் சிரிப்புடன் மெதுவாக மிருதங்க வித்துவானை ஆசுவாசப்படுத்தினார்.

அதே நிமிடத்தில் தன்னுடைய கைத்தொலைபேசியை திடீரெனப் பார்த்த வயலின் வித்துவான் தனக்கு எதிராக சில அடி தூரத்தில் இருந்து தன் வாத்தியமான புல்லாங்குழலை   சரி பார்த்துக் கொண்டிருந்த தன் உற்ற நண்பன்  மீதும் அர்த்தமுள்ள பார்வை  ஒன்றை அள்ளி வீசினார்.

அப்படி என்னதான் அந்த தொலைபேசியில் வந்திருக்கும் என்பதை அறியாதவர் அல்ல மிருதங்க வித்துவான். அவருடைய ஆதங்கம் எல்லாம் தனக்கும் அதைப் பகிர்ந்து கொள்வார்களா என்பதிலேயே இருந்தது.

ஆரம்பத்தில் அவருக்கு இவையெல்லாம் தெரியாத வித்தைகளாக இருந்த போதும் அவரும் பன்றியுடன் சேர்ந்த பசுவாக மாறி விட்டதை அவர் தொலைபேசியில் வரும் படங்களும் அதன் மொழிகளும்  பறை சாற்றத் தொடங்கின. ஆரம்பத்தில் இருந்த கலாச்சாரம் சார்ந்த பயம், பண்பாடு எல்லாமே காற்றோடு கலந்து விடுவதற்கு காரணம் அவருக்கும் அவர் மனைவிக்கும் பலத்த கருத்து வேறுபாடுகள் காரணமாய் அவர் தள்ளி இருந்ததுதான்.  அப்படியிருந்தும் அவருடைய குடும்பப் பின்னணியில் இப்படியான ஒழுக்கம் கெட்டவர்கள் இருந்ததில்லை என்ற உண்மை அவரை இடையிடையே வதைத்தெடுத்தது.

“கலைகளை மதித்துப் போற்றும் ஒரு சமூகத்தில் இப்பிடியும் இருக்கினம் வித்துவான்கள், சேர்ந்து சிரிக்காட்டால் பிறகு என்னை ஒரு நல்லது கெட்டதுக்கு கூட்டிக்கொண்டு போக மாட்டாங்கள், நாசமாய்ப் போவார்…”

ஆரம்பத்தில் தனக்குள்ளேயே அவர்களைத் திட்டிய மிருதங்க வித்துவானுக்கு நாளடைவில் மனச்சாட்சியை விட வயிற்றுப்பசியின் தாக்கம் அதிகரித்ததில் அவரும் அவர்களது அசிங்கங்களைக் கண்டும் காணாதவராய் இருந்தது மட்டுமல்ல அவர்களில் ஒருவராயே மாறிவிட்டார்.

இதில் அதி உச்ச அசிங்கமானது அவர்கள் தம் கண்களில் எத்தும் பெண்களையெல்லாம் வயது வித்தியாசமின்றி பாலியல் ரீதியில் விபரித்து அதற்கு கண், மூக்கு, வாய் வைத்துப் பேசுவதும், அவர்கள் படங்களை  பகிர்ந்து கொள்வதும் தொலைபேசியில் தொந்தரவு கொடுப்பதும், தமது அருகதை தெரிந்து திட்டும் பெண்களை  தமது படுக்கை அறை வரை வந்தார்கள் என வதந்தி பரப்பி அப்பெண்களை மானபங்கபடுத்துவதும் தான்.

“உவளவையை வைக்கிற இடத்தில வைக்க வேணும், பொம்பிளைகள் எண்டால் எப்பவும் வாய் பொத்தி கை கட்டி நிக்கிறதை விட்டிட்டு மனுசனுக்கு சரி சமமாய் நிண்டு காசு விசயம் கதைக்கிறதைப் பாருங்கோவன்”

முன்பொரு தடவை தமக்கு கச்சேரி பண்ணுவதற்காக பண விடயம் கதைக்க வந்த கணவன் மனைவியைப் பார்த்து புல்லாங்குழல் வயிலினுக்கு ஊதியதை மிருதங்கமும் கேட்டுக்கொண்டது.

மற்றவர்களுக்கு முன்னாள் வயிற்றுப்பிள்ளை வழுக்கி விழும் போல இருக்கும் அவர்களது கதையை மக்கள் கூட்டம் நம்பி, அவர்களை சாதாரணமான, நற்குணங்கள்  மிக்க மற்றைய வித்துவான்களாக மதிப்பது இன்னும் எவ்வளவு காலம் என இடையிடையே எட்டிப் பார்க்கும் அவரது மனச்சாட்சி கேட்டுக்கொண்டது. அவர் அதை விரட்டிக்கலைத்தார்.

அரங்கேற்றமும் கச்சேரியும் முடித்து வெளியே வந்தவருக்கு, அவர்களுக்காக காத்திருந்த பெரும் புள்ளிகள் இரண்டைக் கண்டதும் சாதுவான கலக்கம் ஏற்பட்டது. பெண்களை கவிழ்ப்பதில்  இவர்கள்  இருவரையும் விழுங்கி ஏப்பம் விடுவதில் கில்லாடியான இரண்டு மேதைகள் வெளியே காத்திருந்து இவர்களை அழைத்துப் போயினர்.

தமது படிப்புக்கும்  தொழிலுக்கும் சம்பந்தமில்லாத அவர்களது திரைமறைவு மோசடிகளையும் தில்லு முல்லுகளையும்  அவரும் அறிந்து தான் இருந்தார்.

 

கண்மணி இவையெதுவும் தெரியாமலே தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தாள்.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை

 

புத்தகம் மூடிய மயில் இறகாகப் புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை

புத்தகம் மூடிய மயில் இறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு…

சென்றால் வர மாட்டாள் அதுதானே பெரும்பாடு…

தந்தன தானென… தந்தன தானென

தந்தன தானென… தந்தன தானென

 

கண்மணி மெல்ல மெல்ல தன் தூக்கத்தை இழக்கத் தொடங்கினாள்…

 

Leave A Reply

Your email address will not be published.