செப். 24 இல் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சகல பாதைகளையும் முற்றுகையிட அழைப்பு!
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் அரசின் முயற்சியை முறியடிப்பதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பிரதான பாதைகளையும் முற்றுகையிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆனந்த பாலித அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு தனது ஊழல்வாதிகளைப் பாதுகாக்கவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற முயல்கின்றது.
மக்கள் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலாக இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் நாடாளுமன்றத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதே செப்டெம்பர் 24ஆம் திகதி நடக்கவுள்ள போராட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதற்காகச் சட்டத்தரணிகள் சங்கம், 54 தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரண்டு வர வேண்டும்.
நாட்டில் பாதாள உலகக் குற்றங்களும் போதைப்பொருள் புழக்கமும் பாடசாலைகள் வரை ஊடுருவியுள்ள நிலையில், சாதாரண பொதுமக்களுக்கான சிவில் பாதுகாப்பு முற்றாகச் சீர்குலைந்துள்ளது.
அண்மையில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இரு அப்பாவிச் சிறுவர்கள் இரவில் உறங்கிக்கொண்டிருந்தபோது கொடூரமாகக் கொல்லப்பட்ட போதிலும், அரசு அது குறித்து எவ்வித அனுதாபமும் தெரிவிக்கவில்லை. பாதாள உலகத்தையும் குற்றங்களையும் ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தியா மற்றும் சீனாவிடம் பெருமளவிலான கடன்களைப் பெற்றுள்ள போதிலும், இவ்வாறான சர்வதேச மாநாடுகளில் இலங்கை புறக்கணிக்கப்படுவது தற்போதைய அரசுக்குச் சர்வதேச அளவில் எவ்வித இராஜதந்திர அங்கீகாரமும் இல்லை என்பதையே காட்டுகின்றது.
மேலும், எரிபொருள் விலைச்சூத்திரத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாமல் கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ள போதிலும், புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்காமல், திருகோணமலை தொட்டிகளையும் வெளிநாடுகளுக்கு வழங்கிவிட்டு மீண்டும் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விலையை உயர்த்த அரசு ஆயத்தமாகி வருகின்றது.” – என்றார்.
