நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசமைப்பை உருவாக்கும் வாக்குறுதியில் மாற்றமே இல்லை! – பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்து என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன உறுதி.

நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டுக்குப் பொருத்தமான முரண்பாடற்ற வகையில் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என நாம் அளித்த வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் கிடையாது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து செப்டெம்பர் 21 ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த இரண்டாண்டு காலப்பகுதியில் பல்வேறு வெளியகத் தாக்கங்களுக்கு மத்தியிலும் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதுடன், அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய யாப்பு உருவாக்க நடவடிக்கைகளில் மக்கள் பங்குபற்றுவதற்கான மனநிலை இருக்க வேண்டும். அதற்கு நாட்டின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை அத்தியாவசியமானதாகும்.

பலராலும் எதிர்க்கப்பட்டு வந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.

அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கான, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு அமையப் புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படும்.

நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டவர்கள் இன்று சட்டத்துக்குட்படுத்தப்பட்டுள்ளமை பாரியதொரு மாற்றமாகும்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர்தான் மக்கள் மத்தியில் போலியான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர். நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிப்பதால் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறையின் சுயாதீனத்துக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

நீதிமன்றக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்படும் போது நிலுவையில் உள்ள வழக்குகள் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதனால் எதிர்க்கட்சியில் உள்ள ஊழல்வாதிகள் பாதிக்கப்படலாம். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர பொதுப் பிரச்சினையல்ல.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக எப்போதுமே ஒன்றுபட்டதில்லை. மாறாக, தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே தற்போது அவர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.