எரிபொருள்களின் விலையை உயர்த்தி மக்களின் கன்னத்தில் அறைந்த அரசு! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் கண்டனம்.
நாடளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர் மற்றும் சர்வதேச வயோதிபர் தினங்கள் கொண்டாடப்படும் வேளையில், தற்போதைய அரசு சிறார்கள், வயோதிபர்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரஜைகளின் கன்னத்தில் அறைந்தால் போல் எரிபொருள் விலைகளைக் கூட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார்.
இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றவும், நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி அதிகாரங்களைப் பெறவும் தற்போதைய அரசின் பிரதிநிதிகள், துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையிலேயே எரிபொருள்களைப் பெற்றுத் தருவோம் என்று பிரஸ்தாபித்தனர்.
எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து திறைசேரிக்கு வழங்கப்படும் பணம் நிறுத்தப்படும், ஊழல் மற்றும் கமிஷன் தொகைகள் ஒழிக்கப்படும் என்றனர். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் அனைத்தும் பச்சையாக மீறப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பல பில்லியன்களை ஒதுக்கி அண்மைய மாதங்களில் எரிபொருள் மானியங்களைப் பெற்றுத் தருவோம் என்று ஜனாதிபதி பிரஸ்தாபித்திருந்தார். அவ்வாறாயின், இந்தச் சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலையை ஏற்றியதன் மூலம் ஜனாதிபதி அப்பட்டமான பொய்யையே அள்ளிக் கொட்டியுள்ளார் என்பது உறுதியாகின்றது.
திறைசேரியில் பெரும்ப பணம் சேமிக்கப்பட்டிருந்தால், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி சாதாரண மக்களுக்கும் இயலாதவர்களுக்கும் ஏன் நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியாது?
இனிமேலாவது இந்த அப்பட்டமான பொய்யுரைக்கும் அரசியலில் இருந்து விடுபட்டு, நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறி சலுகைகளைப் பெற்றுக் கொடுக்குமாறும், பொய்யான பேச்சுக்களை நிறுத்துமாறும் அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
