தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தலைமைத் தேர்தல் ஆணையரை ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனாஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையரை ஞானேஷ் குமார் இடைநீக்கம் தொடர்பான இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

அதேநேரத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஞானேஷ் குமார் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இரு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷிக்கும் மத்திய அரசுக்கும் இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை தேர்தல் ஆணையர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. அந்தவகையில், ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்தால் அந்த உத்தரவுகளை திரும்பப் பெற நேரிடும் என்றும் கூறியுள்ளது.

அதாவது, தேர்தல் ஆணையம் எடுக்கும் ஏதேனும் ஒரு முடிவு சட்டத்திற்கு முரணாக இருப்பது கண்டறியப்பட்டால், அதை ரத்து செய்வோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட படிவம் 6-க்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘படிவம் 6’ உடன் புதிதாக இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணையம் அண்மையில் கூறியிருந்ததற்கு மாறாக தலைமை நீதிபதி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.