தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்த மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எல். முருகன்!
மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் இன்று (அக். 13) அறிவித்துள்ளார்.
2029 மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கத்தில் முழுநேர கட்சிப் பணியாற்ற அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தற்போது கட்சிப்பணி ஆற்றிவரும் நிலையில், எல். முருகனும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ராஜிநாமா குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை எல். முருகன் எழுதியுள்ளார். அதில், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எல். முருகன் பதிவிட்டுள்ளதாவது:
”பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பாரதத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றுவது என் வாழ்நாளின் மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.
ஒரு தினக்கூலியின் மகனாக இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று நாட்டிற்கு பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டது சிறந்த பாக்கியமாகக் கருதுகிறேன்.
தற்போது நான் களப்பணிக்கு மீண்டும் திரும்பி, 2029 மக்களவைத் தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். நாட்டின் நலனே முதன்மை. கட்சி அதற்கு அடுத்தது. இறுதியாகத்தான் எனது நலன்” என எல். முருகன் பதிவிட்டுள்ளார்.
