சவூதியில் அனோஜனுக்கு மரணதண்டனை இரத்து! – இராஜதந்திர முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்கின்றார் வெளிவிவகார பிரதி அமைச்சர்.

சவூதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையைச் சவூதி அரேபிய உயர்நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது என்று வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை சவூதி அரேபிய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கையில் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சமூக ஊடகக் கருத்துத் தொடர்பான குற்றச்சாட்டொன்றின் பேரில் அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் இடம்பெற்ற மேன்முறையீட்டு விசாரணையின் போது அவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் நேரடி வழிகாட்டலின் கீழ், இலங்கை அரசு மேற்கொண்ட தீவிர இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளின் பலனாகவே இந்த மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். அதனடிப்படையில் இந்த வழக்குக்கான அனைத்துச் சட்டச் செலவுகளையும் இலங்கை அரசே ஏற்றுக்கொண்டதுடன், குடும்பத்தினர் ஏற்கனவே செலவிட்டிருந்த தொகையையும் மீள வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கையின் விசேட சட்டக் குழுவினர் சவூதி அரேபிய சட்டத்தரணிகளுடன் இணைந்து அனோஜனை மரணதண்டனையிலிருந்து மீட்பதற்கான போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.

இந்தச் சிறந்த முடிவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசுக்கும், அந்த நாட்டின் நீதித்துறைக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.