அதிசய நிகழ்வு: இந்தியாவில் 16 வயது சிறுவனுக்கு கண் குழியில் முளைத்த பல் – அமெரிக்க கண் மருத்துவக் கழகம் வெளியிட்ட தகவல்!
இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, வரலாற்றில் முதல்முறையாக கண்ணுக்கு மேல் வளர்ந்த பல் வளர்ந்துள்ளது.
கண்ணுக்கு மேல் வளர்ந்த பல்
இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது இடது கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் உள்ள கண் குழியின் மேற்பகுதியில் கடந்த சில மாதங்களாக வலியற்ற வீக்கம் இருந்து வந்தது.
முதலில் ஒரு லேசான கட்டியாக இருந்தது, விரைவில் இரண்டு கடினமான, வெள்ளை நிறப் புள்ளிகள் தோலைத் துளைத்துக்கொண்டு வெளிவரத் தொடங்கியது.
மருத்துவமனைக்கு சென்று CT ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், அந்த பகுதியில் ஒரு பல் முளைத்திருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
வாயை தவிர உடலின் மற்ற பகுதிகளில் வளரும் பல், மருத்துவ ரீதியாக ‘இடம்பெயர்ந்த பல்’ (ectopic tooth) என்று அழைக்கப்படுகிறது.
இந்த அரிய நிகழ்வு குறித்த ஆய்வு விவரங்கள் அமெரிக்க கண் மருத்துவக் கழகத்தில் வெளியிடப்பட்டன.
இந்த ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரான டாக்டர் மேகனா தன்வார், பதிவுசெய்யப்பட்ட இந்த நிகழ்வு, கண் மேல் பகுதியில் பதிவுசெய்யப்பட்ட முதல் மற்றும் ஒரே இடம்பெயர்ந்த பல். இது எங்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே ஒரு முதல் நிகழ்வு என தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், இந்த பற்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அரிதாக ஒரு சிலருக்கு தடை, அன்னம், மூக்கின் உள்ளே கூட பல் வளருவது உண்டு.
ஆனால், கண் குழியில் முதல்முறையாக பல் வளர்ந்து மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், முகக் காயங்களோ அல்லது மரபணுக் கோளாறுகளோ இருந்ததற்கான எந்த வரலாற்றையும் மருத்துவர்கள் கண்டறியாததால், இந்தக் குறிப்பிட்ட சம்பவம் ஏன் நிகழ்ந்தது என்பதை கண்டறிய மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
மேலும், ஸ்கேன்களில் மண்டையோட்டின் வேறு எந்தப் பகுதியிலும் கூடுதல் பற்கள் எதுவும் காணப்படவில்லை.
