ஹாட்லி மைந்தர்களின் நினைவேந்தல் நிகழ்வு! – இன்பர்சிட்டி கடற்கரையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு.

யாழ். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் மைந்தர்களது 27ஆவது மற்றும் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்பர்சிட்டிக் கடற்கரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கல்விச் செயற்பாட்டின் நிமித்தம் இன்பர்சிட்டிக் கடற்பகுதியில் 1999ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவேளை, கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த ஹாட்லிக் கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களான பூரணமூர்த்தி கந்தர்வன், சிவநாதன் இரவிசங்கர், சுந்தரலிங்கம் சிவோத்தமன் மற்றும் பாலகிருஷ்ணன் பிரதீபன் ஆகிய நான்கு பேரின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவனாகக் கல்வி கற்றுவந்தவேளை ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மரியரட்ணம் குணரட்ணத்தின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இன்பர்சிட்டிக் கடற்கரையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அவர்களுக்கு விருப்பமான சிற்றுண்டிகள் படையலிடப்பட்டு, திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவுகூரப்பட்டது. தொடர்ந்து படையலிடப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் மாலை, பூக்கள் என்பன கடலில் விடப்பட்டன.

இந்த நிகழ்வில் உயிரிழந்த மாணவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர்கள், முன்னாள் அதிபர் த.கலைச்செல்வன் மற்றும் பருத்தித்துறை நகரபிதா வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
…………………………….

Leave A Reply

Your email address will not be published.