ஹோர்முஸ் நீரிணையில் ஏவுகணைத் தாக்குதல்: 24 இந்திய மாலுமிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்!
ஹோா்முஸ் நீரிணையில் எல்பிஜி டேங்கா் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 24 இந்திய மாலுமிகள், கப்பல் பணியாளா்கள் இருந்த நிலையில் அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் திங்கள்கிழமை பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற எல்பிஜி டேங்கா் கப்பல் மீது திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கப்பலிலில் மாலுமிகள், பணியாளா்கள் என 25 போ் இருந்தனா். இதில் 24 போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். தாக்குதலில் அவா்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் நலமாக உள்ளனா்.
தாக்குதல் அடுத்து அங்குள்ள சூழல் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை கப்பல் நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டுள்ளது’ என்றாா்.
இந்தத் தாக்குதல் நடத்திய ஈரானா அல்லது வேறு எந்த நாடுகள், அமைப்புகளா என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.
பெரும்பாலும் சரக்குக் கப்பல்களில் இந்திய மாலுமிகள், பணியாளா்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனா். சமீப காலமாக மேற்காசியாவில் நிலவிவரும் பதற்றமான சூழலில் ஹோா்முஸ் நீரிணை வழியாகச் செல்வது கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது
