LTTE தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா? : பிபிசி தமிழுக்கு ஃபேஸ்புக் பிரத்யேக பதில்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சர்ச்சையாகி வரும் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழ், ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.

இந்த சர்ச்சையின் பின்னணி குறித்தும், அதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் அளிக்கும் விளக்கத்தையும் இந்த கட்டுரையில் காண்போம்.

விடுதலைப்புலிகள்

ஃபேஸ்புக் மீதா பயனர்களின் குற்றச்சாட்டு

மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்க தலைவரான மறைந்த பிரபாகரனின் புகைப்படத்துடன் இடப்பட்ட பதிவுகள், அவரை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளிட்டவற்றையும், இலங்கை உள்நாட்டுப் போர் சார்ந்த சில பதிவுகளையும் ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து நீக்கி வருவதுடன், அவற்றை பதிவிட்டவர்கள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்த நிறுவனம் எடுத்து வருவதாக சில ஆண்டுகளாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து, பலரும் பிரபாகரன் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்தபோது இதே அணுகுமுறையை ஃபேஸ்புக் நிறுவனம் கையாண்டதாக கூறப்படுகிறது.

உதாரணமாக, கனடாவை சேர்ந்த நீதன் சண் என்பவர், “சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஈழத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் எனது இடுகையை பேஸ்புக் நீக்கியுள்ளது. மேலும், நான் அடுத்த 30 நாட்களுக்கு ஃபேஸ்புக்கில் நேரலை அல்லது விளம்பரம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. தங்களது நிறுவனத்தின் விதிமுறைகளை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் எடுத்துள்ளது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்ற விவகாரங்களில் ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு குறித்து தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுபோன்ற தணிக்கைகள் தனது கருத்துரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, Jæs J Wiki என்ற பெயரில் செயல்படும் ஃபேஸ்புக் பயனர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபாகரனின் பிறந்த தினத்தன்று அவரது புகைப்படத்தை பகிர்பவர்கள் மீது ஃபேஸ்புக் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. யாராவது பிரபாகரனின் புகைப்படத்தையோ அல்லது அவரது சகாக்களின் புகைப்படத்தையோ பகிர்ந்தால் அதை கண்டு கலக்கமடையும் ஃபேஸ்புக், அவர்களின் கணக்குகளை தற்காலிகமாக தடை செய்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பிரபாகரனுடன் அரசியல்/ கருத்தியல் சார்ந்து வேறுபாடுகள் இருந்தாலும், இதுபோன்று பதிவுகளை ஃபேஸ்புக் தணிக்கை செய்வதும், பயனர்கள் எதை பகிர வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதும் பாசிசத்தின் தீவிர சமிக்ஞை என்று அவர் மேலும் தனது பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதே போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அதிருப்தியை சமீபத்திலும், கடந்த காலங்களிலும் பலரும் ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்தி வருவதை காண முடிகிறது.

பிரபாகரன் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தடுப்பது ஏன்?

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரன் சார்ந்த உள்ளடக்கங்களை பதிவிட்டதற்காக தனிப்பட்ட நபர்களின் ஃபேஸ்புக் பதிவுகள், கணக்குகள் மட்டுமின்றி சில ஃபேஸ்புக் பக்கங்களும் இதே போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பிபிசி தமிழ் நேரடியாக முன்வைத்த கேள்விகளுக்கு பொதுப்படையான பதிலை வழங்கிய ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர், “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும், முக்கியமான கலாசார, சமூக மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் ஃபேஸ்புக்கிற்கு வருவதை நாங்கள் மதிக்கிறோம். எனினும், வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள்

வெறுப்பையோ அல்லது வன்முறையையோ பரப்பும் வகையில் தங்கள் தளம் பயன்படுத்தப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

எனினும், ஒரு குறிப்பிட்ட இயக்கம் அல்லது தனிப்பட்ட நபர் வன்முறைக்கு வித்திட்டார் என்பதை எதனடிப்படையில் ஃபேஸ்புக் முடிவு செய்கிறது என்ற கேள்விக்கு, “வெறுப்பை தூண்டும் அமைப்புகளை பட்டியலிடுவதற்கு நாங்கள் ஒரு விரிவான செயல்முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த செயல்முறையைச் செம்மைப்படுத்த உலகெங்கிலும் உள்ள பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்” என்று ஃபேஸ்புக் பதிலளித்துள்ளது.

உதாரணமாக, இனம், மத சார்பு, தேசியம், பாலினம், பாலியல் நாட்டம், கடுமையான நோய் அல்லது இயலாமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுத்த அல்லது நேரடியாக வன்முறையில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் அவற்றின் தலைவர்களை வெறுப்புணர்வை தூண்டும் அல்லது ஆபத்தான இயக்கங்கள்/ தலைவர்களாக வகைப்படுத்துவதாக ஃபேஸ்புக் மேலும் விளக்கம் அளித்துள்ளது.

“ஆபத்தான அமைப்புகளை தடைசெய்யும்போது, அவற்றின் இருப்பை அகற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும், எங்கள் கண்டறிதல் முறைகளிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”

வெறுப்புணர்வை தூண்டும் திட்டமிடப்பட்ட செயலுக்கு எதிரான ஃபேஸ்புக்கின் கொள்கையை மீறியதற்காக நீக்கப்படும் பெரும்பாலான உள்ளடக்கங்களுக்கு தாங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் உள்ளடக்க மதிப்பாய்வே காரணம் என்றும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஒரு குழுவை சேர்ந்த பலரை ஒரே நேரத்தில் நீக்குவதற்கான பணியிலும் ஃபேஸ்புக் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஃபேஸ்புக் பயனர்களின் பதிவுகள், ஃபேஸ்புக்கின் ஆபத்தான அமைப்புகள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருவதால் அவற்றை நீக்கியது சரியே என ஃபேஸ்புக் உறுதியாகக் கூறுகிறது.

எனினும், ஃபேஸ்புக்கில் பயனர்கள் பகிர்வதற்கு அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்கள், தலைவர்கள் மற்றும் விவகாரங்களின் ஒட்டுமொத்த பட்டியலை அளிக்க பிபிசி விடுத்த வேண்டுகோளுக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.

நன்றி: பீபீசீ தமிழ்

Leave A Reply

Your email address will not be published.