இடைவெளியை பின்பற்றாத றெமிடியஸ் மீது சாட்சி நீதிமன்றத்தில் முறையீடு

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் முகக் கவசம் அணியாது குறுக்கு விசாரணை செய்வது தொடர்பில் சாட்சியான மு.தம்பிராசா மன்றிடம் முறையிட்டார். அதனால் சட்டத்தரணியை சமூக இடைவெளியைப் பேணி சாட்சியை குறுக்கு விசாரணை செய்யுமாறு மன்று அறிவுறுத்தல் வழங்கியது.

அரசியல் செயல்பாட்டாளர் க.மு. தம்பிராசாவிடம் 6 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டு வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் எதிரி சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ், சாட்சியான மு.தம்பிராசாவிடம் சுமார் ஒரு மணிநேரம் குறுக்கு விசாரணையை முன்னெடுத்தார்.

ஒரு கட்டத்தில் சாட்சி மு.தம்பிராசா, மன்றிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார்.

எதிரி தரப்புச் சட்டத்தரணி முகக்கவசம் அணியாமல் தனக்கு அருகே வந்து குறுக்கு விசாரணை செய்கின்றார் என்று சாட்சி தனது முறைப்பாட்டை முன்வைத்தார்.

சாட்சியின் முறைப்பாட்டையடுத்து, எதிரி தரப்புச் சட்டத்தரணியை சற்று தூரத்திலிருந்து குறுக்கு விசாரணையை முன்னெடுக்குமாறு மன்று அறிவுறுத்தல் வழங்கியது.

அதனடிப்படையில் குறுக்கு விசாரணையை மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னெடுத்தார்.

Comments are closed.