தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? இராதாகிருஷ்ணன் எம்.பி. கேள்வி.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? – இராதாகிருஷ்ணன் எம்.பி. கேள்வி

“இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லையெனில் சிறைகளில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் அரசியல் கைதிகல் என எவரும் இல்லை. அவ்வாறு இருந்தால் ஒருவரின் பெயரையாவது, அவ்வாறு கூறுபவர்கள் வெளியிடவேண்டும்’ என்று அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் வினவியபோதே இராதாகிருஷ்ணன் எம்.பி. மேற்கண்டவாறு வினா தொடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களைப் பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாமும் அது பற்றி கதைத்துள்ளோம்.

நல்லாட்சியின்போது தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அப்படியானால் சிறைகளில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் இருக்கின்றனரா அல்லது இல்லாமல் செய்யப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.