பிரிட்டன்- இந்தியா இடையே விமான சேவை தற்காலிக நிறுத்தம்

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அங்கிருந்து இந்தியா வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மன், கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களையும் ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பிரிட்டனில் பரவி வரும் கரோனா வைரஸின் புதிய வகையால் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப் பட வேண்டுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஹர்ஷவர்த்தன் பதில் அளிக்கையில் “ மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாக கரோனா வைரஸ் சூழலை கையாள்வது குறித்து அரசு நன்கு அறிந்துள்ளது. அரசு மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருப்பதால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை.’’ எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாவது:
‘‘பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை டிசம்பர் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பர் 22-ம் தேதி 11.59 மணியில் இருந்து விமானங்கள் நிறுத்தப்படும். மேலும் 22-ம் தேதி இரவுக்குள் பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்’’ எனக் கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.