இலங்கையில் மேலும் 5 மரணம்; கொரோனா சாவு 181ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 17, 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 68 வயது ஆணொருவர் கடந்த 17ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 ஐச் சேர்ந்த 55 வயது ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 77 வயது ஆணொருவர் கடந்த 18 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மக்கொன பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண்ணொருவர் கடந்த 19ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு 10 ஐச் சேர்ந்த 83 வயது ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு கொரோனாத் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவர்களின் உயிரிழப்புகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிமோனியா நிலைமையே காரணம் என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.