பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரத்தை அடக்க முயலாதீர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்
ஊடக சுதந்திரத்தை அடக்க முயலாதீர்
கோட்டா அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து.

“ஊடக சுதந்திரத்தைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக்கொண்டு அடக்க முயற்சிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசிடம் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ். பொலிஸாரால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள வன்மையான கண்டனத்திலேயே  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“மக்களின் குரலாக ஒலிப்பவையே ஊடகங்கள். கருத்துத் சுதந்திரத்துடன் ஊடகங்கள் செயற்பட வேண்டும். அந்தச் சுதந்திரத்தை சட்டங்கள் கொண்டு எவரும் அடக்க முடியாது.

உதயன்’ பத்திரிகையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக்கொண்டு அடக்க அரசு எடுத்துள்ள முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சுமார் 35 ஆண்டுகளாக ‘உதயன்’ பத்திரிகை சேவையாற்றி வருகின்றது. உயிர்ப் பலிகளையும் சொத்திழப்புக்களையும் தாங்கிக்கொண்டு மக்களுக்கான மகத்தான சேவையில் ‘உதயன்’ உழைத்து வருகின்றது. இந்தநிலையில், இந்தப் பத்திரிகை மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை அரசின் திட்டமிட்ட சதி நடவடிக்கையைக்காக்கும்.

இது ஊடக சுதந்திரத்தை மீறிய ஒரு செயல். இது தவறான நடவடிக்கை. இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

‘உதயன்’ மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உடன் வாபஸ் பெறுமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.