ஐயப்பன் வழிபாட்டில் பங்கேற்ற தொற்றாளர் : புதுக்குடியிருப்பில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோம்பாவில் கிராமத்தைச் சேர்ந்த மரக்கறி மொத்த விற்பனையாளர் ஒருவர் இன்று கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று புதுக்குடியிருப்பில் நடைபெற்ற ஆலய வழிபாடு ஒன்றில் பங்குகொண்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐயப்பன் விரதத்தில் ஈடுபடுகின்ற அவர் இன்று ஐயப்பன் விரத இறுதி நாள் வழிபாட்டுக்காக குறித்த ஆலயத்துக்குச் சென்றிருக்கின்றார்.

புதுக்குடியிருப்புக்கும் – கைவேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படுகின்ற குறித்த ஆலயத்தில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 40 இற்கும் மேற்பட்டவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளமை குறித்த தகவல்களைப் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் சேகரித்துள்ளனர்.

இதேவேளை, வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதன் தொடராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்றிரவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தொற்றாளர் தனக்கு நெருக்கமானவர்கள் என்று 24 வரையான நபர்களை இதுவரை அடையாளம் காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.