கண்மணியே பேசு! பாகம் ஒன்பது 

கண்மணியே பேசு!

கோதை

பாகம் ஒன்பது 

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சமையலறையில் பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தவளுக்குப் பழக்கதோஷத்தில் கைகள் சமையலுக்குத் தேவையான  பொருட்களை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டிருந்தாலும் அவள் மனம் ஆறு மாதம் முன்  இருந்து நடந்தவற்றை அசை போட்டது.

அவளுக்குப் பொதுவெளியில்  பாடுவதற்கும் ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்கும் காரணமாயிருந்த அவளது குடும்ப நண்பர் வாயிலாக மீண்டும் அவனது அறிமுகம் கிடைத்த போது அவள் அதை இயல்பாகத் தான் ஆரம்பத்தில் எடுத்துக் கொண்டாள்.   ஆனால் நாட்கள் ஓடிய போது அவர்களது பால்ய காலத்து நினைவுகளும் பலவிதமான தாயகத்து ஞாபகங்களும் மீட்டப் பட்டு அசை போடப்பட்ட போதுதான் அவள் மனம் தான் இழந்து போன சில காலங்களை அடைவதற்கு ஆசைப்பட்டது.  அவள் தனிமையும், அன்பிற்காக ஏங்கிய மனதும் ஒன்று சேர்ந்ததில் அவளது திடமான மனது அவனது அன்பான சம்பாசனைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதென முடிவு எடுத்துக் கொண்டார்கள். கண்மணிக்கு அவனது கனவுகளும் அவளை அவன் ஊரில் இருந்த போதே அவளுக்குத் தெரியாமல் விரும்பியிருந்தான் என்பதும் இன்னும் பல சம்பவங்களும் அவளை அவன்பால் ஈர்த்து, அவள் தனிமையைப் போக்கடித்தன.  அவளும் அவனும் ஒரே மேடையில் பாட வேறு ஆரம்பித்திருந்ததும் அவளை அவன் மீது அன்பும் பாசமும் காதலும் கொள்ள வைத்தன.

“சாப்பாடு ரெடியா? இவ்வளவு நேரம் எடுக்குதா?” நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தவளுக்கு அவனது குரலில் தெரிந்த கடுமை அவளை அதிரப் பண்ணினாலும் ஏதோ அவசரத்தில் அப்படிக் கேட்க நேர்ந்திருக்கலாம் எனத் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

 

“சமையல் எல்லாம் இந்தா முடிச்சிட்டன், வந்து கொண்டிருக்கு!” அவசரம் அவசரமாகச் சொல்லியபடி அவள் அவனுக்கான தட்டு, காலை ஆகாரமான தோசை, சம்பல், சாம்பார் எல்லாவற்றையும் அழகாக எடுத்து வைத்தாள்.

“வாங்கோ வாங்கோ எல்லாம் மேசையில வைச்சிட்டன்!” சொல்லியவாறே அன்போடு அவனைப் பார்த்த போது அவன் எதுவுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது கைத்தொலைபேசியில் யாருடனோ மிக முக்கியமான தொடர்பாடல் ஒன்றில் இருந்தான்.

சில நிமிடங்கள் கரைந்தன,  அவளுக்கு அவை நீண்ட காலத்தைத் தாண்டுவது போல இம்சையாக இருந்தாலும் அவள் பொறுத்துக்கொண்டாள்.

“சூடு ஆற முதல் சாப்பிடுங்கோ, வாங்கோ இரண்டு பேருமாய்ச் சாப்பிடலாம்!” அவள் இதமாக மீண்டும் ஒரு முறை அவனை அழைத்தாள்.

 

 

“எனக்கொண்டும் வேண்டாம், பசிக்கேல்லை!” சொன்னதுடன் நிற்காமல் அவன் தொலைபேசியில் சிரித்துக் கதைத்தபடியே குளிருக்கான உடைகளைப் போட்டவாறே முன் வாசல்க் கதவை அறைந்து சாத்தியபடி வீட்டை விட்டுப் புறப்பட்டிருந்தான்.

அவளுக்கு என்னவோ போலாகி விட்டது.  தனிமைக்கு மருந்தாய் இருப்பான் என நம்பி வந்தவன் இவ்வளவு விரைவில் மாறிவிடுவான் என்பதை அவளுக்கு ஜீரணிக்க முடியாமல்த் தான் இருந்தது.  கோபம், ஆற்றாமை. அழுகை. கழிவிரக்கம் என எல்லாமே கலந்த கலவை ஒன்று அவள் மனதில் சம்மணம் போட்டு இருந்து கொண்டது.  இப்படி இலகுவில் மனத்தை தளர விடக்கூடாது என அவள் எண்ணினாலும் அது மிகுந்த கடினமான காரியமாய்த்தான் இருந்தது.

என்ன செய்யலாம் என யோசித்த போது, அவனுடன் கதைக்க முடியாதது தான் அவளுக்கு மிகுந்த வேதனையைக் கொடுப்பதாய் பட்டது.  அவன் வந்த பின் ஆறுதலாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போதைக்கு உடனடியாக ஒன்றும் செய்வதற்கில்லை எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு சிறிது நேரம் வீட்டுக் கணணிக்கு முன்னே இருக்கலாம் என நினைத்துக்கொண்டாள்.

அப்போது தான் அவளுக்கு அவன் தனது கணணிப் பக்கத்தை அப்படியே விட்டுவிட்டுப் போனது தெரியவந்தது. இனி இதை அணைத்து பின் திரும்பவும் கட்டுக்குள் கொண்டு வர நேரமும் சிரமுமாக இருக்கப் போகிறது என எண்ணிக்கொண்டாள். சரி இப்ப என்ன வந்தது? இதில் இருந்தபடியே எனக்குத் தேவையான விடயங்களை ஆய்வு செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தபடி, தனக்கென ஒரு ஆவணத்தை தயார் பண்ணிக்கொண்டாள்.  அவளுக்கு சில சங்கீதம் சார்ந்த குறிப்புகள் தேவைப்பட்டிருந்தது.  அவள் அவற்றைத் தேர்ந்தெடுத்து தனது ஆவணத்தில் சேகரித்த பின் ஒரு கணம் யோசித்தாள். இதை அவனுடைய பக்கத்தில் தான் சேகரிக்க வேண்டி வரப்போகிறது, பரவாயில்லை , தேவையானபோது அவனிடம் அதைக் கேட்டுக்கொள்ளலாம் அல்லது அவனுடைய பக்கத்தில் சேகரித்த பின் தன்னுடைய மின் அஞ்சலுக்கு அனுப்பிக்கொள்ளலாம் என யோசித்த படி அதை அவன் பக்கத்தில் சேகரிக்கச் சென்ற போது தான் அவளுக்கு ஏதோ மனதில் பொறி தட்டியது. கண்களைக் கசக்கிப் பார்த்துக் கொண்டாள்.

அவனுடைய துரதிஷ்டமோ அல்லது அவளுடைய அதிஷ்டமோ தெரியவில்லை, அவளுடைய பெயரை வித்தியாசமான முறையில் உச்சரித்து அவன் ஒரு ஆவணத்தைச் சேகரித்து வைத்திருந்தான். அது அவள் கண்களிலும் விழுந்திருக்கிறது. என்னவாக இருக்கும் என்ற இயல்பான ஒரு ஆவலும், அதே நேரம் அவனுடைய அனுமதி இன்றி அதைத் திறக்கக்கூடாது என்ற தயக்கமும் என இரு மனங்களின் ஊடே அவள் அல்லற்பட்டு,  பின் மனம் தெளிந்தாள்.

அதைத் திறந்து பார்ப்பது என்ற முடிவுக்கு அவள் வந்ததற்கு அவள் சில காரணங்களைக் காரணம் காட்ட முனைந்தாள்.  ஒன்று அது அவள் பெயரில் இருக்கும் ஒரு ஆவணம், இரண்டாவது அவனுக்கு அவள் பெயரைத் திருத்தி எழுதுமாறு கோருவதற்கு ஒரு சந்தரிப்பம் கொடுக்க அது ஏதுவாக இருக்கலாம் என்பது , அத்துடன் அது பிழையாக இருக்குமாகப் பட்டால் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டு விட்டு இனிமேலும்  இப்பிடி ஒரு விடயத்தைச் செய்யாமல் இருப்பது என்று பல காரணங்களைக் கண்டு பிடித்து, தான் செய்வது சரிதான் எனத்  திடசங்கற்பம் பூண்டாள் கண்மணி.

மிக ஆவலுடன் அவள் தன்  பெயரில் இருந்த ஆவணத்தைத் திறந்த அடுத்தடுத்த நிமிடங்களுக்குள் அவளுடைய உலகம் சுக்கு நூறாகியது என்று சொன்னால் அதன் ஆழம் அதனிலும் பல நூறு மடங்கு பெரியது என்றே  எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.  அவள் கண்கள் இருட்ட, அந்த ஆவணத்தில் இருந்த காணொளியைப் பார்க்க முடியாமல் கண்கள் இருட்ட, தன் முன்னே இருந்த கணனி மேசையைப் பிடித்துக் கொண்டாள். நா வறண்டு, நீர் இல்லாமல் பல மணிகள் கடந்ததைப் போல் ஒரு நிலையை,  அந்த சிறு வினாடிகளில்  அவள் உடல் எட்டியிருந்தது. இனி அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையை அவள் மூளை அவளுக்குத் தராத படி அவளின் சகல பாகங்களும் ஒரு இறுகிய நிலையை அடைந்திருந்தது.  மயங்கிச் சாய அவள் உடல் தயாரான போது தான் அவளுக்கு எங்கிருந்தோ வந்த ஒரு பலம் அவளை ஆட்கொண்டது.

கண்மணியின் கண்களைக் கூசப் பண்ணிய அந்தக் காணொளியில் இருந்ததை அவள் எவருக்கும் கூறத்தான் முடியுமா என்ன? இருந்தாலும் கண்மணி தன் போல எவரும் ஈனப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பேசத் துணிந்தாள்.

கண்மணி பேசுவாள்…

Leave A Reply

Your email address will not be published.