விமான நிலையத்தை திறப்பதில் தாமதம் ஏற்படலாம்?

நாட்டிற்கு வருவதற்கு பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை திறப்பதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்ததோடு, சுற்றுலா பயணிகளுக்காக நாடு திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிலைமையை கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு பின்னர், அல்லது ஓகஸ்ட் இறுதி வரை விமான நிலையத்தை மீண்டும் திறப்பது ஒத்தி வைக்கப்படலாம் எனவும், அவர் தெரிவித்தார்.

எனினும், ஓகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்காக முடியுமான வரையில் தாம் முயற்சி செய்வதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தருபவர்கள், தங்களது நாட்டிலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

குறித்த பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, கொரோனா தொற்றுக் காணப்படுமாயின், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்பதோடு, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

தனிமைப்படுத்தப்பட்டு 07ஆவது முதல் 10ஆவது நாட்களுக்கு இடையில், மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று காணப்படவில்லையாயின், அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.

Comments are closed.