சர்வதேச விசாரணைக்கு இலங்கை அஞ்சுவது ஏன்? – அரசிடம் விக்கி கேள்விக்கணை

“உங்கள் படைகள் போர்க்குற்றம் ஏதும் இழக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால், சர்வதேச விசாரணைகளைக் கண்டு அஞ்சுவது ஏன்?”

– இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்.

‘இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எனவே, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்’ என்று ஜெனரல் கமல் குணரத்தன வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளித்தே இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஆங்கில அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஜெனரலின் கருத்துக்களை நான் வரவேற்கின்றேன். இது எங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றது. இலங்கைப் படைகள் இந்த ‘நல்ல ஜெனரல்’ கூறியமை போன்று நல்லொழுக்கத்தின் ஒரு முன்னுதாரணமாக இருந்திருந்தால், இலங்கை ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்? சர்வதேச அரங்கில் எங்கள் முன்மாதிரியான நடத்தையை நாம் நிரூபிக்க முடிவதோடு எங்கள் மீதான கெட்ட பெயரையும் ஒரேயடியாகத் துடைத்தழிக்க முடியும் அல்லவா?

இந்த நல்ல ஜெனரலின் கருத்தை – அறிக்கையைக் கவனத்தில் எடுத்து, அதனடிப்படையில் இலங்கைப் படைகளால் செய்யப்பட்டவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது என அரசு – குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அறிவிக்க வேண்டும்.

இறுதிப் போர்க்காலமான – 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒட்டிய காலத்தில் என்ன நடந்தது என்பதை போர்க்களத்தில் நெருக்கமாக இருந்த இந்த நல்ல ஜெனரல் நன்கு அறிந்திருப்பார்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.