கொழும்பு சென்று திரும்பிய வடக்கு இளைஞர்கள் 11 பேரில் மூவருக்குக் கொரோனா!

வெளிநாடு செல்வதற்காகக் கொழும்பு சென்று திரும்பிய வடக்கு இளைஞர்கள் 11 பேரில் மூவருக்குக் கொரோனா!

தனிமைப்படுத்தப்பட வேண்டிய மிகுதி எண்மரும் தலைமறைவு

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து வெளிநாடு செல்வதற்காகக் கொழும்பு சென்று தங்கியிருந்த 11 பேரில் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வாரம் கொழும்பில் குறித்த 11 பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகக் குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்பது நடைமுறையாகும்.

இந்தநிலையில், பி.சி.ஆர். முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக 11 இளைஞர்களும் தமது ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

நேற்று அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் அவர்களில் 3 பேருக்குக்  கொரோனாத் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்பு சுகாதாரத் திணைக்களத்தால் இளைஞர்கள் வதியும் மாவட்டங்களின் சுகாதாரத் திணைக்களங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதையடுத்து குறித்த மூவரும் சுகாதார உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்பட்டு இன்று முற்பகல் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஏனைய 8 இளைஞர்களும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டியுள்ளதால் அவர்களைத் தேடும் நடவடிக்கையை சுகாதாரத் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

இருந்தபோதிலும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை என்பதால் அவர்கள் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் தாமாக, சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பது சமூகத்துக்கு செய்யும் கைமாறு என்று சமூக நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.