தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம்.


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம்.

சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் இன்று காலை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சிவில் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில்  இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

யாழ்ப்பாணத்தில்

அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் நல்லூர் ஆதீனத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டார்கள்.

வவுனியாவில்

இதேவேளை, வவுனியாவிலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வவுனியா காமினி மகா வித்தியாலத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டவர்கள், “இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்”, “எமது உறவுகளை சிறைகளில் மடியவிடவேண்டாம்”, “தமிழ் அரசியல் கைதிகள் பயங்கவாதிகள் இல்லை”, “கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கு” போன்ற வசனங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்தியும், கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சியில்

அரசியல் கைதிகளின் குடும்பங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கோஷங்கள் எழுப்பியதுடன் பொங்கல் பரிசாக அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

மன்னாரில்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரிலும் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுமத் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.

பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் ஊடகங்கள் முன்பாக வாசிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு

அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் அமைப்பினர் ஆகியோரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவிலும் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கிழக்கில்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

‘இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க’ என்னும் தொனிப்பொருளில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையைப் பின்பற்றியவாறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்து குருமார்கள், வணபிதாக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர். சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலர் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.