மாணவர்களைச் சீண்டுவதற்காக அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயல் : இரா.சம்பந்தன்

மாணவர்களைச் சீண்டுவதற்காக
அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயல்.

நினைவுத் தூபி இடித்தழிப்புக்கு
எதிராகச் சம்பந்தன் போர்க்கொடி

“தமிழர்களின் அடையாளச் சின்னங்களில் நினைவுத் தூபிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திட்டமிட்டே இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய உணர்வுடன் அன்று தொட்டு இன்று வரை செயற்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் சீண்டிப் பார்க்கும் வகையில் அரங்கேற்றப்பட்ட அராஜகச் செயலே இது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் ஆகியோரின் நினைவாகவே யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டது. இதன் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகம், இந்தத் தூபியை இரவோடிரவாக இடித்தழித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே நினைவுத்தூபியை இடித்தோம் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். ஆனால், நினைவுத்தூபியை அகற்ற முடிவெடுத்தது பல்கலைக்கழக துணைவேந்தர்தான் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். அதேவேளை, நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அப்படியெனில் இந்த நினைவுத்தூபி யாரின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டது?

ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும். உரிய தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும்.

இந்தச் செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தற்போதைய நிலைமையில் தேவையற்ற செயல். ஒரு குழப்பத்தை – ஒரு புதிய பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்குகின்ற செயல்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.