இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டிரா

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் விளாசிய சதத்தின் உதவியுடன் 338 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கில் மற்றும் புஜாராவின் அரைசதம் ரன்கள் குவிய வழிவகுத்தது.  எனினும், 3வது நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 100.4 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

கடைசி 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் சாய்த்தனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் மொத்தம் 37 ஓவர்களை மெய்டனாக வீசி இந்தியாவின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர்.

இதன்பின்னர் 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து மொத்தம் 197 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்தது.

நேற்று 4வது நாள் ஆட்டம் தொடர்ந்தது.  இதில், லபுஸ்சேன் 73 (118 பந்துகள், 9 பவுண்டரிகள்) ரன்களில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  வேட் 4 (11 பந்துகள், 1 பவுண்டரி) சஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  ஸ்மித் (81), கிரீன் (84) என இரண்டு பேட்ஸ்மேன்களும் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தனர்.

பண்ட்க்கு பதிலாக களமிறக்கப்பட்ட சஹா தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டார்.  சைனி பந்து வீச்சில் கிடைத்த 2 கேட்சுகளையும் தவற விடாமல் பிடித்துள்ளார்.  இந்த போட்டியில் சஹா 4 கேட்சுகளை பிடித்து விக்கெட்டுகளை எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

அந்த அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 312 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிக்ளேர் என அறிவிக்கப்பட்டது.  பெய்னி (39) ஆட்டமிழக்கவில்லை.

தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்து, ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்தது.  ரோகித் சர்மா (52), கில் (31) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  புஜாரா (9), ரஹானே (4) ரன்கன் எடுத்திருந்தனர்.

இதன்பின் 5வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது.  இதில், லயான் வீசிய பந்தில் வேடிடம் கேட்ச் கொடுத்து ரஹானே 4 ரன்களில் வெளியேறினார்.  இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய பண்ட் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

இந்தியா, உணவு இடைவேளைவரை 70 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது.  புஜாரா (41) மற்றும் பண்ட் (73) ரன்கள் எடுத்திருந்தனர்.

பின் மீண்டும் ஆட்டம் தொடர்ந்ததில் புஜாரா 77 (205 பந்து 12 பவுண்டரி) அரைசதம் கடந்து விடை பெற்றார்.  ரஹானே (4), பண்ட் 97 (118 பந்து 12 பவுண்டரி 3 சிக்சர்) எடுத்து சதம் அடிக்க தவறினார்.

இந்திய அணி தேநீர் இடைவேளைவரை 96 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 280 ரன்கள் குவித்திருந்தது.  விஹாரி (4), அஸ்வின் (7) ரன்கள் எடுத்திருந்தனர்.  தொடர்ந்து இந்தியா விளையாடியது.  இதில் விஹாரி மெல்ல ரன்களை சேர்க்க தொடங்கினார்.  மறுபுறம் அஸ்வின் சற்று அடித்து விளையாடினார்.

இதனால் விஹாரி 23 (161 பந்து 4 பவுண்டரி), அஸ்வின் 39 (128 பந்து 7 பவுண்டரி) ரன்கள் எடுத்திருந்தனர்.  131 ஓவர்கள் வீசப்பட்டதில் இந்தியா 5 விக்கெட்டுகளுக்கு 334 ரன்கள் எடுத்திருந்தது.  இன்னும் ஓர் ஓவர் மீதம் இருந்த நிலையில் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.  இதனால், இரு அணி வீரர்களும் கைகுலுக்கி விட்டு சென்றனர்.  போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.