ராஜித உட்பட மூவருக்கு எதிராகக் குற்றப்பத்திரம்!

முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவர் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை 2014 ஆம் ஆண்டு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழே இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு குறித்த சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.

இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உட்பட பிரதிவாதிகள் மூவரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதிவான் பிரதீப் ஹெட்டியாரச்சி உத்தரவிட்டுள்ளார்.

இதேநேரம், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று, அவர்களது முன்னைய குற்றங்கள் குறித்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.