இலங்கைக்கு இந்தியா கடுமையான கண்டனம் – மீனவர்கள் சாவு விவகாரத்தால் சீற்றம்

இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா.

புதுடில்லியில் இந்தியாவிற்கான இலங்கைப் பதில் தூதுவரை அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை தெரிவித்த அதேசமயம் இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு தமது அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகும் இலங்கை கடற்படையினரின் டோராவும் மோதியதில் மூன்று இந்திய மீனவர்கள மற்றும் அவர்களுடன் தொழில் செய்த இலங்கை அகதி மீனவர் ஒருவர் என நால்வர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர், இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் இந்த சம்பவம் குறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

புதுடில்லிக்கான இலங்கையின் பதில் தூதுவரும் புதுடில்லியில் வெளிவிவகார அமைச்சின் சவுத் புளொக்குக்கு அழைக்கப்பட்டார். அவரிடமும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம், “உயிரிழப்புகள் தொடர்பில் எங்கள் வேதனயை வெளியிட்டுள்ளோம். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் கையாள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையில் இந்த விவகாரம் குறித்து காணப்படும் புரிந்துணர்வைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்” என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இந்திய நாடாளுமன்றில் இவ்விடயம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இலங்கையில் சீனா, பாகிஸ்தான் எல்லாம் வந்துவிட்டன. இந்தியா ஏன் அதனைக் கட்டுப்படுத்தவில்லை? ஒரு ராஜீவ் காந்திக்காக இன்னமும் 90 ஆயிரம் தமிழ் மக்களின் இழப்பைக் கருதாமல் இருக்க வேண்டாம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வரும் பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்றார் அவர்.

இதற்கிடையில் மேற்படி மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

“நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் இந்திய மீனவர்களின் மபடகின் பின்பகுதி இலங்கைக் கடற்படை ரோந்து கப்பலின் மீது மோதியதில் கப்பல் சேதம் அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன் மற்றொரு ரோந்து கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்தனர்” என்று இந்தியத் தரப்பில் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.