ஐ.நாவில் இலங்கைக்கு இம்முறை கிடுக்கிப்பிடி! – மிகக் காட்டமான அறிக்கையைச் சமர்ப்பிக்க ஆணையாளர் முடிவு

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக மிகக் காட்டமான அறிக்கையை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் சமர்ப்பிக்கவுள்ளார்.

கூட்டத் தொடருக்கு முன்னதாக இதன் இறுதி வடிவம் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.

அந்த அறிக்கையின் பிரதி ஒன்று தற்போது இலங்கைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, இலங்கையின் பதிலளிக்கும் உரிமைக்காக தற்போது அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த வட்டாரங்களின் கூற்றுப்படி, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக இதுவரை சமர்ப்பிக்கப்பட்டவற்றில், அதிக அழுத்தம் ஏற்படுத்தும் அறிக்கையாக இது அமைந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை தமக்குக் கிடைத்துள்ளதை இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதி செய்துள்ளது. இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரமும் உள்ளடக்கப்படவுள்ளது.

அமர்வின்போது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான சபையின் தீர்மானம் 30/1 ஐ அமுல்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையை இலங்கையும் சமர்ப்பிக்கும். இதன்போது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் உட்பிரிவுகளில் திருத்தம், அரசியல் கைதிகளின் வழக்குகளை மீளாய்வு செய்தல், புதிய ஆணைக்குழு ஒன்றை நிறுவுதல் போன்ற விடயங்களையும் இலங்கை உள்ளடக்கவுள்ளது.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, மனித உரிமை விவகாரங்களில் அதன் கடமைகளை தற்போதைய மற்றும் முந்தைய அரசுகளில் தோல்வி குறித்தும் மிச்செல் பச்லெட் அம்மையார் கரிசனை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் மற்றும் கடந்த அரசும் இணை அனுசரணை வழங்கிய 40/1 தீர்மானம் ஆகியவற்றிலிருந்து இலங்கையின் புதிய அரசு விலகியுள்ளது.

மனித உரிமைகள் பிரச்சினையில் முன்னேற்றத்தைக் காண்பிப்பதற்காக 2015 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை இரண்டு தீர்மானங்கள் மூலம் இலங்கை அரசுக்குப் போதியளவு அவகாசம் வழங்கப்பட்டது.

இருப்பினும், அரசு தனது கடமையை நிறைவேற்றவில்லை என்று சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்தப் பின்னணியில் இலங்கை மீது கிடுக்குப்பிடி பிடிக்க இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.