கொரோனா தொற்றுக்குள்ளான வாசுதேவ நாணயக்கார சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

வாசுதேவ நாணயக்கார கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அமைச்சரின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், கொக்கல பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று (24) கொழும்பிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மேலும் இரு வாரங்களுக்கு அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, கொரோனா தொற்றிய 5 பாராளுமன்ற உறுப்பினர்களில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஶ்ரீ.ல.மு.கா. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மகளிர்‌ மற்றும்‌ சிறுவர்‌ அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும்‌ ஆரம்பக்‌ கல்வி, அறநெறிப்‌ பாடசாலைகள்‌, கல்விச்‌ சேவைகள்‌ மற்றும்‌ பாடசாலைகள்‌ உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொண்ட PCR சோதனையில், எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என, கலவி அமைச்சு விடுத்திருந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.