யாழ். மாநகர ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!! தப்பியது மணியின் தலை ! கூட்டமைப்பு நடுநிலை

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்தனர்.

தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகப் பதவி வகித்த இ.ஆனோல்ட் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி இழந்தார்.

அதன்பின்னர் நடைபெற்ற மேயர் தெரிவில் இ.ஆனோல்ட் மற்றும் வி.மணிவண்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் வி.மணிவண்ணன் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதையடுத்து அவரால் இன்று புதிய வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் இன்று சபைக்கு வரவில்லை.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள் எதிராகவும், அக்கட்சியின் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

ஈ.பி.டி.பி. உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதன்படி 23 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.