தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு வடக்கில் சகலரும் பேராதரவு!கிழக்கும் எழுச்சி.

தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு வடக்கில் சகலரும் பேராதரவு!கிழக்கும் எழுச்சி

அரசின் அராஜகச் செயல்களுக்கு எதிராகவும் தமிழின அழிப்புக்கு எதிராகவும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அஹிம்சை வழிப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளன.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் என்பவற்றால் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நாளை மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை நான்கு நாட்கள் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளன.

இந்தப் போராட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துவதற்கு அறிக்கை வெளியிடுவது எனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த அஹிம்சைப் போராட்டத்துக்கு கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், பல் சமய ஒன்றியங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பனவும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன. போராட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.