ஆயுதப் போராட்டத்தின் இலக்கை ஜெனிவா மூலம் அடைய முயற்சி!

ஆயுதப் போராட்டத்தின் இலக்கை
ஜெனிவா மூலம் அடைய முயற்சி!

பதறுகின்றது விமலின் கட்சி

“தமிழீழ விடுதலைப் பலிகள் ஆயுதப் போராட்டம் மூலம் அடைய முயற்சித்த இலக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தீர்மானங்கள் ஊடாக புலம்பெயர் அமைப்புக்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றன.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இம்மாதம் இடம்பெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடர் தீர்மானமிக்கதாக அமையும். முன்னைய காலங்களில் மனித உரிமைகள் ஆணையாளர், இராணுவத்தினருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார்.

ஆனால், தற்போது அரசுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

முப்பது வருட கால யுத்தம் முழு நாட்டுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. பெரும் போராட்டத்துக்கு மத்தியில் யுத்தம் 2009 மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த அரசு புலம் பெயர் அமைப்புக்களுக்கும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கும் முன்னுரிமை வழங்கியது. இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர்களுக்கும் நாடாளுமன்றுக்கும் அறிவிக்காமல் இணை அனுசரணை வழங்க இணக்கம் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசில் சர்வதேச அமைப்புக்களின் நோக்கங்கள் நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டன. அரசியல் நோக்கங்களை கொண்டு பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டதால்தான் கடந்த அரசை மக்கள் புறக்கணித்தனர். இதேவேளை, நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சர்வதேச அமைப்புக்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து அரசு விலகிக்கொண்டமை முதற்கட்ட செயல்பாடாகும்.

ஆகவே, இம்மாதம் இடம்பெறவுள்ள 46 ஆவது கூட்டத் தொடர் தீர்மானமிக்கமாகக் காணப்படும். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆயுமேந்தி போராடியதன், இலக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பிரேரணைகள் மூலம் புலம்பெயர் அமைப்புக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றார்.

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை எனச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தவில்லை. ஆகவே, குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை இம்முறை அரசு பகிரங்கப்படுத்தும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.