பிரசவித்த சிசுவை கொன்று புதைத்த தாய்! பொலிசார் நீதிமன்றில் வழக்கு.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சிசு ஒன்றை வீட்டில் பிரசவித்து அந்த சிசு இறந்துள்ளதாக மையவாடியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடுத்ததையடுத்து புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் திங்கட்கிழமை (08) நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கருவுற்றுள்ள நிலையில் கடந்த 2 ஆம் திகதி சிசு ஒன்றை வீட்டில் பிரசவித்துள்ளார்.பின்னர் சிசு இறந்து பிறந்துள்ளதாக அப்பகுதி பள்ளிவாசலுக்கு அறியப்படுத்தி சிசுவின் சடலத்தை பூநொச்சிமுனை மையவாடியில் புதைத்துள்ளனர்.

இதன்பின்னர் சிசுவை பிரசவித்த தாயார் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையை நாடிய நிலையில் அந்த வைத்தியசாலை வைத்தியர் உடனடியாக அம்புயூலன்ஸ் வண்டியை வரவழைத்து போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அவரை அனுப்பியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற தாயாருக்கு எதிராக பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று திங்கட்கிழமை (08) குறித்த மையவாடியில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எல்.எம். றிஸ்வான் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியர்களான வைத்தியர் சி.எஸ். ஜலப்பெரும, வைத்தியர் ஈ.டபிள்யூ.என்.ஈ. சாமிக்க, வைத்தியர் எஸ்.சிவகாந்தன் ஆகியோர் பார்வையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.