திருகோணமலை எரிபொருள் தாங்கிகள்: இரு தரப்பும் நன்மையடையும் வகையில் தீர்வு! – இந்தியத் தூதரகம் பதிலடி

இந்தியாவும் இலங்கையும் இணைந்து இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை மீண்டும் இலங்கை வசமாக்குவது குறித்து கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியடி தூதுவர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளது எனவும், அதனடிப்படையில் 2017ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு முயற்சிக்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும், திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் அனைத்தும் வெகுவிரைவில் இலங்கை வசமாகும் எனவும் சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் கருத்துக்குப் பதிலளித்துள்ள, இந்தியத் தூதரகம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை மற்றும் இந்தியா, எரிபொருள் தொடர்பான கூட்டாண்மையை தங்களது ஒத்துழைப்பின் முன்னுரிமை பரிமாணங்களில் ஒன்றாக அடையாளம் கண்டுள்ளது. இலங்கையின் எரிபொருள் பாதுகாப்புக்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது.

அதற்கமைய, திருகோணமலையில் உள்ள எரிபொருள் தாங்கிகளின் அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டில், இரு தரப்பும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இலங்கையுடனான ஆக்கபூர்வமான தொடர்பைத் தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.