செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின் கலம், தரையிறக்கினார் சுவாதி மோகன்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி நாசா விஞ்ஞானிகள், ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் மேற்கொள்ளும் ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது குறித்து புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்கிருப்பது தெரிய வந்துள்ளது. ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் நிலைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தி தரையிறக்குதல் ஆகிய பணிகள் இவரது கண்காணிப்பில் நடைபெற்றது.

கடந்த 2013-ல் தொடங்கிய இந்த திட்டத்தில் முதலில் இருந்தே சுவாதி மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விண்கலத்தின் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்துள்ளார். ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தன், ஒன்றாவது வயதில் அமெரிக்கா சென்றார். பள்ளியில் படிக்கும்போது, குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்த அவருக்கு, ‘ஸ்டார் டிரெக்’ டிவி நிகழ்ச்சியைப் பார்த்ததால் புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.