ஜெனிவாச் சவாலை முறியடித்தே தீருவோம் கோட்டா சூளுரை.

ஜெனிவாச் சவாலை முறியடித்தே தீருவோம்
கோட்டா சூளுரை.

“நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாச் சவாலை நாம் முறியடித்தே தீருவோம். புதிய பிரேரணையையும் வலுவிழக்கச் செய்வோம்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத் ‍தொடர்பில் இலங்கை குறித்து விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ள நிலையில் புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்தநிலையில், ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை நேற்று ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சகல உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி கடிதங்கள் அனுப்பியுள்ளேன். எமது நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என்பதில் உறுதியான நம்பிக்கையில் இருக்கின்றோம்.

புதிய பிரேரணை ஊடாக எந்தத் தரப்பும் எமக்குச் சவால் விட முடியாது. அந்தப் பிரேரணை ஒன்றில் தோல்வியடையும் அல்லது வலுவிழந்து போகும்.

எமது நட்பு நாடுகள் இலங்கையை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது. ஆனால், எமது நாட்டிலுள்ள தமிழ்க் கட்சியினர் உள்ளிட்ட எதிரணியினர் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோக நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்த நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டாது. நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாச் சவாலை நாம் முறியடித்தே தீருவோம்.

எமது நாடு இறைமை உள்ள நாடு என்பதை நாட்டுக்கு எதிராகத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.