ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்த இலங்கை அரசுக்கு நன்றி!

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்த இலங்கை அரசுக்கு நன்றி!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்தமைக்குப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ருவிட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயால் உயிரிழக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அது தொடர்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு அனுமதித்த நிலையில் அதற்கான வர்த்தமானி அறிவிப்பை நேற்று அரசு வெளியிட்டது.

இதற்கமைய பாகிஸ்தான் பிரதமர் கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு இலங்கைக்குத் தனது நன்றியைத் தெரவித்துக்கொள்வதுடன் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பை வரவேற்பதாகவும் அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான், இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டபோது, கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை, அவர்களின் மத நம்பிக்கைக்கு மாறாக எரிக்கும் இலங்கையின் கொள்கைக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் குரல் கொடுக்க வேண்டும் என்று முஸ்லிம் தலைவர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இம்ரான் கான் பாகிஸ்தானுக்குப் புறப்பட முன்னதாக முஸ்லிம் தலைவர்களைக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போது,”எல்லா இலங்கையர்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தவும் பிரஜைகளின் கவலைகளைப் போக்கவும் இலங்கையின் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று இம்ரான் கான் நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.