இந்திய காணொளிகளுக்கு மூன்று ஆண்டுகளில் ரூ.21,000 கோடி அளித்த யூடியூப்.

இந்தியாவில் இருந்து காணொளிகளைப் பதிவிடுவோர்க்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.21,000 கோடி வழங்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் யூடியூப் நிறுவனம், மேலும் ரூ.850 கோடி முதலீடு செய்யும் என அதன் தலைமைச் செயலதிகாரி நீல் மோகன் கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 10 கோடிக்கும் அதிகமாக யூடியூப் ஒளிவழி மூலம் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் அவற்றுள் 15,000க்கும் மேற்பட்ட அலைவரிசைகள் ஒரு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து காணொளிகள் பதிவிடுவோர், ஊடக நிறுவனங்களை ஆதரிக்கவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் தங்கள் நிறுவனம் ரூ.850 கோடி முதலீடு செய்யவிருப்பதாகவும், கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளை உலகம் முழுவதும் உள்ள யூடியூப் பயனர்கள் 45 பில்லியன் மணிநேரம் செலவிட்டு பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்தியாவின் சிறப்புகளைப் பலரும் மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்துகின்றனர். இந்திய வரலாறு, கலாசாரத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பயனர்கள் கண்டுகளிக்கின்றனர்,” என்று நீல் மோகன் மேலும் கூறினார்.