எத்தனை பிரேரணைகள் கொண்டுவந்தாலும் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்கமாட்டோம்!

எத்தனை பிரேரணைகள் கொண்டுவந்தாலும்
இராணுவத்தைக் காட்டிக்கொடுக்கமாட்டோம்!
அமைச்சர் காமினி லொக்குகே கூறுகின்றார்

“இலங்கைக்கு எதிராக எத்தனை பிரேரணைகள் கொண்டுவந்தாலும் ஒருபோதும் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்கமாட்டோம். இராணுவத்தினரைப் பாதுகாக்க விசேட பொறிமுறை சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும்.”

இவ்வாறு போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சர்வதேச போக்குவரத்து தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து மாறுபட்ட பல கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளன.

நாட்டு மக்கள் குறிப்பாக கத்தோலிக்க மக்கள் விசாரணை அறிக்கை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முழுமையற்ற அறிக்கையை ஆணைக்குழுவினர் சமர்ப்பித்துள்ளார்கள் என்பதை ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பான பொறுப்பை அரசால் ஏற்கமுடியாது.

கடந்த அரசால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த ஜனாதிபதி முனைந்தபோது அதற்கு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை இடமளிக்கவில்லை.

ஆணைக்குழுவில் மாற்றம் ஏற்படுத்தாமல் துரித அறிக்கையைக் கோரினார்கள். சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை நிறுத்தப்படவில்லை. விசாரணை நடவடிக்கைள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஆகவே, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அரசு முழுமையாக நிராகரித்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.