தேசியக் கட்சிகளால் தமிழ் வாக்குகள் சிதறாது தமிழ் தலைமைகள் பாதுகாக்க வேண்டும்- தேசிய மக்கள் சக்தி

தமிழ் மக்களின் வாக்குகள் தேசியக் கட்சிகளினால் சிதறாத அளவிற்கு தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக மன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு வாக்கினை தேசிய மக்கள் சக்திக்கு தாருங்கள் என வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களிடம் நாம் ஒரு கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம் . யாழ், வன்னி தேர்தல் மாவட்டங்களுக்கு 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் ஒரு உறுப்பினராக எமது கட்சி சார்பில் தெரிவு செய்ய மக்கள் ஆணைவழங்க வேண்டும்.

முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்து பதினொரு வருடங்கள் கடந்த பின்னும் தமிழ் மக்களின் அபிலாசைகளை இதுவரை காலமும் பாராளுமன்றத்தை அலங்கரித்த தமிழ் கட்சிகளால் நிறைவேற்ற முடியாது போயுள்ளது. அதனாலேயே எமக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்கின்றோம்.

சுயநிர்ணய உரிமைக்காக போராடிய மக்கள் சுயத்தை இழந்து போகிறார்கள். மிகவும் வறுமை கூடிய மாகாணமாக வடக்கும் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவும் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் தற்கொலைப் போராளிகளாக முதலிடம் பெற்றிருந்த நாம் தற்போது வாங்கிய கடனை திருப்பி செழுத்தாது தற்கொலை செய்வதில் முதலிடம் வகிக்கின்றோம். அந்தளவிற்கு பொருளாதாரத்தில் பின்நிற்கின்றோம். இதனை மாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும்.

கருணா அம்மான் தெரிவித்த கருத்து தற்போது தென்னிலங்கையில் பேசுபொருளாகியுள்ளது. கருணா பேசியதைப் போன்று வேறு யாராவது பேசியிருந்தால் அவர்கள் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் வேகமாக பாய்ந்திருக்கும். ஆனால் கருணாவிற்கு எதிராக பாரிய அளவிலான நடவடிக்கைகள் எதுவும் ஏற்படவில்லை.

இராணுவ வீரர்களை கொண்றேன் என கூறிய கருணா சுகந்திரமாக நடமாடித் திரிகின்ற போதும் கருனாவால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் பல வருடக்கணக்காக சிறையில் வாடுகிறார்கள்.

வயிற்றில் ஆறுமாத குழந்தையுடன் கைதுசெய்யப்பட்ட பெண் போராளி அவருடைய குழந்தைக்கு 16 வயதாகியும் விடுதலை செய்யப்படவில்லை. தயா மாஸ்டர் என்று சொல்லப்படுகின்ற புலிகளின் முன்னாள் உறுப்பினரின் கையொப்பம் அடங்கிய அடையாள அட்டையினை வைத்திருந்த இளைஞன் 5 வருடங்களாக சிறையில் உள்ளான்.இவ்வாறு பல முன்னாள் போராளிகளும் தமிழ் அரசியல் கைதிகளும் பல ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிவருகின்றனர். எனவே இவர்களை நிபந்தனையில்லாது விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களின் வாக்குகள் தேசியக் கட்சிகளினால் சிதறாத அளவிற்கு தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்கின்றது. ஆனால் கடந்த காலங்களில் கூட்டமைப்பு தேசியக் கட்சியான ஐ.தே.காவின் குரலாக செயற்பட்டது.

தமிழ் தேசியக் கட்சிகளின் செயற்பாடுகள் மந்த நிலையில் இருப்பதால் தான் தேசியக் கட்சிகள் தமிழர் பிரதேசங்களில் காலூன்றுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுகந்திரக் கட்சி மற்றும் இங்கு இருக்கின்ற தமிழ் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். தமிழ் கட்சிகள் வடக்கில் தமிழர்களின் குரலாக காட்டிக்கொண்டு தெற்கில் சிங்களக் கட்சிகளோடு குலாவிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகும்.

தமிழ் தேசியக் கட்சிகள் என்று கூறிக்கொண்டு வாக்களித்த தமிழ் மக்களுக்கு துரோகமிளைத்துள்ளனர். அதனால் தேசிய மக்கள் சக்தியை ஒருமுறை பரிட்சித்துப் பாருங்கள் என்றார்.

Comments are closed.