பொறுப்புக்கூற வேண்டியவர்களே இப்போது கூச்சலிடுகின்றார்கள்! சாடுகின்றார் அமைச்சர் சமல்.

“2015ஆம் ஆண்டு முதல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெறும் வரை இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் அழுத்தங்களின் காரணமாக பொலிஸாரால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாவனெல்ல சம்பவம் இடம்பெற்றபோதே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்றிருக்காது. எவ்வாறாயினும் பொறுப்புக்கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிடுகின்றனர்.”

இவ்வாறு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியால் இது தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் கோரப்பட்டுள்ளது. அரசு அதற்கு தயாராகவுள்ளது. எவ்வாறிருப்பினும் பொறுப்புக்கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர்கள் தாம் அறிந்தவற்றை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கூறியிருக்கலாம். அவ்வாறின்றி தேவையற்ற கருத்துக்களைக் கூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. எவ்வாறிருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து முறையாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

2015ஆம் ஆண்டு முதல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெறும் வரை இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் அழுத்தங்களின் காரணமாக பொலிஸாரால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாவனெல்ல சம்பவம் இடம்பெற்றபோதே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.