யாழ். மரக்கறிச் சந்தையில் 9 வியாபாரிகளுக்குக் கொரோனா! வடக்கில் இன்று 23 பேருக்குத் தொற்று உறுதி.

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 21 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 600 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே, 23 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்.நகர் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 9 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மரக்கறிச் சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 9 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

இதில் பனை உற்பத்திப் பொருள்கள் வியாபாரிகள் 6 பேரும், மரக்கறி வியாபாரிகள் 3 பேரும் அடங்குகின்றனர்.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் இருவரும் காரைநகர் இ.போ.ச. பஸ் பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள்.

மன்னாரில் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.