கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் சிவன் கோயிலின் தொன்மை.

இலங்கையின் வடபாகத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று பழமை வாய்ந்த உருத்திரபுரம் (உருத்திரபுரீஸ்வரர் சிவன் கோயில் ) கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ளது,

திராவிட கட்டடக்கலைமரபில் அமையப்பெற்ற இவ்வாலயத்தில் காணப்படும் சதுர ஆவுடை இலிங்கம் பல்லாயிரம் ஆண்டு பழமையானது. இவ்வாலயம் பற்றிய வரலாற்று தகவல்களை தொல்லியல்(கட்டட இடிபாடுகள், சுடுமண் உருவங்கள், செங்கல் கட்டுமானம்), இலக்கிய குறிப்புக்கள், வாய்மொழி செய்திகள், ஐதீகக்கதைகள் ஊடாகவும் அறியலாம்

ஆரம்பத்தில் அப்பாதையின் இருமருங்கும் அடர்ந்த காடாகவும் வண்டில் மாட்டுப் பாதையொன்றும் தான் இருந்தது.

பிற்பட்ட (1949) காலத்தில் மக்கள் குடியிருப்பு மையமாகவும் இக்கிராமம் 1952 உருத்திரபுர குடியேற்றதிட்டமாக உருவெடுத்தது.

1882.09.02 இல் யாழ்ப்பாண அரச அதிபராக இருந்த Sir William Twynan அவர்களால் உருத்திரபுர காட்டுப் பகுதியில் ஆவுடையுடன் கூடிய இலிங்கம், அதன் அருகே காணப்படும் குளம் என்பவற்றை அடையாளப்படுத்தினார் இக்குளமே (சிவன் கோயில் குளம்) இவ்வாலயத்தின் தீர்த்தக்கேணியாகவும் இருந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது

இவ்வாலயம் பற்றி பேராசிரியர்களான ப.புஸ்பரட்ணம், செ.கிருஸ்ணராஜா, விரிவுரையாளர் செல்வமனோகரன், மற்றும் சிங்கள அறிஞர்களான கொடகும்பர, சிரான் தெரணியாகல, பரணவிதான மற்றும் லூயிஸ் J.P, சி.வி. நவரட்ணம், ம.பத்மநாபன் (அதிபர்) போன்றோர்களின் குறிப்புக்கள் ஊடாகவும் இவ்வாலயத்தின் பழமையை அறிந்து கொள்ள முடியும்
திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார் சிவவழிபாட்டின் தொன்மைக் காலம்தொட்டு ஈழத்தில் பெற்றிருந்த செல்வாக்கினை இது தெளிவுபடுத்துகின்றது இன்று ஈழத்தில் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரர், முன்னேஸ்வரர், தொண்டேஸ்வரர், நகுலேஸ்வரம் போன்ற சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களைப் போன்று சப்த ஈஸ்வரங்கள் இருந்திருக்க வேண்டும் அவற்றுள் ஒன்றாக உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவன் கோவிலும் இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்

உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் தொன்மை பற்றி நாம் நோக்குகையில்

1.உருத்திரபுர சிவாலயம் 1958 ஆகம முறைப்படி நிறுவப்பட்டடு குடமுழுக்கு சுருக்கமாக முறையில் கீரிமலையைச் சேர்ந்த ஐயம்பிள்ளை குருக்களால் நடந்தேறியது

2.பொதுவில் சற்சதுர ஆவுடையுடன் கூடிய இலிங்கம் 2400 ஆண்டுகளுக்கு மேலான பழமையானது உதாரணமாக ஆந்திர குடிமல்லத்தின் பரசுராமேஸ்வரர் ஆலயத்தில் கிடைத்த இலிங்கம் 2400 ஆண்டு பழமையானதாகும்

3.ஆவுடையுடன் கூடிய லிங்கம் அமைக்கும் மரபு மிகப்பழமையானது குறிப்பாக இந்தியாவின் காவிரிப்பூம்பட்டணத்தில் இவ்வாறான இலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பேராசிரியரின் ப.புஸ்பரட்ணம் அவர்களின் மன்னார் கட்டுக்கரை அகழ்வாய்வில் கிடைத்த ஆவுடையுடன் கூடிய லிங்கம் 2000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த சுடுமண் இலிங்கங்கள் ஏராளமாக கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது

4.பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் “கிளிநொச்சி மாவட்டத்தின் பூர்வீக மக்களும், பண்பாடும் தொல்லியல் வரலாற்று நோக்கு”, “பூநகரி தொல்பொருளாய்வு” எனும் கட்டுரையில் உருத்திரபுர சிவாலய கட்டட இடிபாடுகளை சோழர்காலத்துக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என குறிப்பிடும் அதேவேளை அங்கு கண்டெடுக்கப்பட்ட சற்சதுர ஆவுடையார் வரலாற்று பழமையானது என்று கூறிப்பிடுகிறார்

5.பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் சற்சதுர ஆவுடை இலிங்கம் இற்றைக்கு 2400 ஆண்டு பழமையானது என்று குறிப்பிடுகிறார்

6.முனைவர் இராஜகோபால் அவர்கள் கி.பி 6ம் நூற்றாண்டில் சதுர ஆவுடை இலிங்கம் செல்வாக்கு செலுத்தியதாக குறிப்பிடுகிறார்

7.பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா அவர்கள் “கிளிநொச்சியின் பண்பாட்டுத்தொன்மையும் தொல்லியல் மூலங்களும்” எனும் கட்டுரையில் தென்னிந்தியாவில் பல்லவர்கால பத்தி இயக்கத்தின் சூழலில் உருத்திரபுரம் சிவன் கோயில் எழுச்சியடைந்திருக்க வேண்டும் என்பதை அங்கு கண்டெடுக்கப்பட்ட பல்லவர்கால சிற்ப பாணியினை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுகிறார் மேலும் பல்லவர் கால பக்தி நெறியின் பின்னணியில் பௌத்தத்திற்கு எதிராக எழுந்த கோயில் முகாமை நடவடிக்கைகளில் உருத்திரபுரம் சிவன் கோயிலும் பங்கு கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

8.விரிவுரையாளர் செல்வமனோகரனின் “ஈழத்து சைவச் செல்நெறியில் உருத்திரபுரம் சிவன் கோயில்” எனும் கட்டுரையில் 1958 களில் உருத்திரபுரகுளத்திற்கு வடக்கே உள்ள காட்டிற்குள் சிதைவடைந்திருந்த கட்டடங்களும் கருங்கற்களும் கருங்கற்தூண்களும் இருக்கக்கண்டு வேலாயுத சுவாமிகள் என்கின்ற திருவாளர் காந்திவேலாயுதம்பிள்ளை என்பவர் தவத்திரு வடிவேற்சுவாமிக்கும் இவ்வற்புதத்தை தெரிவிக்க அவர் அக்காலத்தில் சமயத்தொண்டாற்றிய சன்மார்க்க சபையினருக்கு தெரியப்படுத்தி காட்டை துப்பரவு செய்தார், சிதம்பரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்ததை ஒத்த கற்றூண்களும் கருங்கற்பாறைகளும் இருக்கக்கண்டு இவ்விடத்தில் ஒரு சிவாலயம் இருந்திருக்கலாம் என ஊகித்து அக்காலப்பகுதியில் யாழ்ப்பாண பத்திரிகையான ஈழநாட்டு பத்திரிகையில் இவ்வாலய பற்றி ஓர் கட்டுரை வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

9.யோகர் சுவாமிகள் தன்னுடைய வேட்டி முடிச்சில் இருந்த பணத்தை எடுத்துக் ஆலத்தை துப்பரவு பணி செய்த சன்மார்க்க சபையிரிடம் கொடுத்து இக்கோயிலின் கட்டடப்பணிக்கு வித்திட்டார் எனக்கூறப்படுகிறது

10.வரலாற்றாவாளர் அருணா செல்லத்துரையின் “அடங்காப்பற்று வன்னியில் ஆதிகால தமிழர் வரலாறு” எனும் நூலில் இலங்கையில் பனங்காமத்தில் பஞ்ச ஆவுடை இலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார் மேலும் ஆவுடையுடன் கூடிய இலிங்கம் குளக்கோட்ட மன்னனால் திருக்கோணேஸ்வரத்தில் வைத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

11.சிங்கள வரலாற்றாசிரியர் கொடகும்பர அவர்களின் சுடுமண் உருவங்கள் பற்றிய குறிப்பில் சக்தி வழிபாட்டுக்குரிய சுடுமண் உருவங்கள் உருத்திரபுரத்தில் கிடைத்ததாகவும் அவை தாய் தெய்வ வழிபாட்டின் தொன்மையை வெளிப்படுத்துவதாகவும், அனுராதபுரத்தில் கிடைத்த சுடுமண் உருவங்களுக்கும் உருத்திரபுரத்தில் கிடைக்கப்பெற்ற சுடுமண் உருவத்திற்குமிடையே பல ஒற்றுமைகள் காணப்படுவதாக குறிப்ட்டுள்ளார்

12.தமிழகத்தைப் போல் இலங்கையிலும் இந்து கோயில்களை கற்களால் அமைக்கும் மரபு கி.பி ஆறாம் நூற்றாண்டின் பின்னரே தோற்றம் பெற்றன இதற்கு முற்பட்ட காலத்தில் மண், மரம், சுதை கொண்டு அமைக்கப்பட்டதை கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் உறுதிசெய்கின்றன இதன் தொடக்க கால ஆதாரமாக பெருங்கற்கால குடியிருப்புக்கள் ஈமச் சின்னங்கள் இருந்த இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் உருவங்கள் மட்பாண்டக் குறியீடுகள் உறுதிசெய்கின்றன
கிளிநொச்சியில் பெருமளவான சுடுமண்ணாலான ஆண்,பெண் உருவங்கள் சிலைகள், சிற்பங்கள்,மிருக,தாவர உருவங்கள் கிடைத்துள்ளன இவை அக்கால வழிபாட்டு சின்னங்களாக நோக்கப்படுகின்றன

13.இரணைமடு.உருத்திரபுரம், பூநகரி முதலான இடங்களில் ஆண்,பெண் உருவங்களுடன் இலிங்க வடிவங்கள் அமைந்த பல சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆய்வு செய்தால் கலாநிதி சிரான் தெரணியாகல அவர்கள் இலங்கையில் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொன்மை என்பதற்கு இவை சான்றாக அமைகிறது என குறிப்பிடுகின்றார்.
இங்கே கிடைத்த லிங்க உருவங்களும், சூலம் பொறித்த மட்பாண்டங்கள் இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சிவ வழிபாடு இருந்ததற்கான சான்று ஆதாரமாகும்

14.இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டுகாபயன் காலத்தில் அனுராதபுரத்தில் இருந்த இரு இந்து ஆலயங்கள் பற்றி கூறுகின்றது இதை ஆராய்ந்த பேராசிரியர் பரணவிதான அவற்றில் ஒன்று சிவன் ஆலயம் எனவும் மற்றையது பிராமணர் வாழ்ந்த இடம் எனவும் கூறியிருப்பது நோக்கத்தக்கது

இரணைமடுவில் கிடைத்த சுடுமண் உருவங்கள் இந்து சமய வழிபாட்டின் தொன்மையை எடுத்துக் காட்டும் அதேவேலை அதுமட்டுமன்றி கிளிநொச்சியின் பூநகரி, ஈழவூர்,இரணைமடு,நாகபடுவான் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் அகழ்வாய்வுகள் கண்டுபிடிக்கப்பட்ட சமய உருவங்கள்
இந்து சமயத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகிறது
பொதுவில் சக்தியான உமையவளின் உருவத்திற்கு பதிலாக ஆவுடை செய்யப்பட்டு அதில் இலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக வரலாறு கூறுகிறது
எனவே மேற்கூறப்பட்ட இலக்கிய தொல்லியல் சான்றாதாரங்களையும் அறிஞர்களின் வாய்மொழிக் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு நோக்கும்போது சோழராட்சிக்கு முற்பட்ட திராவிட கட்டடக்கலைபாணியில் அமையப்பெற்ற உருத்திரபுரம் சிவாலயத்தின் தொன்மையானது பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாக காணப்படும் அதேவேளை இங்கு காணப்படும் கற்தூண்கள், சுடுமண் உருவங்கள், சற்சதுர ஆவுடையுடன் கூடிய சிவ லிங்கம், ஆலய அமைப்பு அதன் சுற்றுச்சூழல் என்பனவும் கட்டட இடிபாடுகளும் இந்துமதத்தின் தொன்மையை வெளிச்சமிட்டு காட்டும் அதோசமயம் வட இலங்கையில் காணப்படும் இந்து சமய ஆலயங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயம் காணப்படுகிறது.

கட்டுரையாளர் கிரிதரன், தொல்லியல் சிறப்பு பட்டதாரி. யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறையில் சில காலம் இவர் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.

Leave A Reply

Your email address will not be published.