போர்க்குற்றம் புரியவில்லையெனில் ஏன் விசாரணைக்குப் பயப்படுகின்றீர்? சிறிதரன் எம்.பி. கேள்வி.

“இராணுவமும் அரசும் தமிழ் மக்கள் மீது கொலைகளையும் குற்றங்களையும் புரியவில்லை என்றால், அநீதிகளை இழைக்கவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்? விசாரணைக்கு முகம் கொடுக்கலாம்தானே?”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“உங்கள் மடியில் கனதி இருப்பதனால்தான் இதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கின்றீர்கள். நீங்கள் போர்க்குற்றம் செய்யவில்லை என்றால் ஒரு பகிரங்க விசாரணைக்குத் தயாராகுங்கள்” எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

“இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு உண்மைகளை தேசிய ரீதியில் கண்டறிய முடியாது. எனவே, இவ்விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்” எனவும் சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.

“ஐ.நா. தீர்மானம் தொடர்பில் இந்தியா நடுநிலைமை வகித்திருந்தாலும் இந்தியா இம்முறை கனதியான செய்தியை இலங்கைக்கு சொல்லியுள்ளது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உலகம் வெட்கித்தலைகுனியக்கூடிய அளவுக்கு இலங்கையில் ஒரு பாரிய இன அழிப்பு நடைபெற்றது. எனவே, இவ்விடயத்தில் சர்வதேசம் தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். அங்கு இது விசாரிக்கப்பட வேண்டும். தமிழர்களின் அபிலாஷை அதுதான்.

ஏனெனில் இந்த நாட்டில் உங்களிடம் இருந்து நீதி கிடைக்கவில்லை. நீங்கள் நீதியாக நடத்தவும் தயார் இல்லை. தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அவர் உரையாற்றிய பல இடங்களில் இந்த நாட்டில் ஒரு தமிழினம் இருப்பதாக, அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாகக் கூறியதுமில்லை. ஏற்றுக்கொண்டதுமில்லை.

அவரின் கிராமமட்ட சந்திப்புக்கள் கூட இதுவரை வடக்கிலோ அல்லது கிழக்கிலோ நடந்ததுமில்லை. இந்த நாடு ஒரு இனவாத சகதிக்குள் மூழ்கிப்போயுள்ளது. அமைச்சர்கள் இனவாதத்தை கக்குகின்றார்கள். இந்த நாடு இனவாதத்தால் அழியப்போகின்றது.

சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டை கொண்டு செல்ல நீங்கள் தயாராகிவிட்டீர்கள். எனவே, சர்வதேச விசாரணை வேண்டும் என்பதும் எமக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.