திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு: நமக்கு தரும் படிப்பினைகள்

இன்று உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் திருப்பாடுகளின் குருத்தோலை ஞாயிறு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

புனித வாரத்தின் ஆரம்ப நாளாக இந்த குருத்தோலை ஞாயிறு தினம் அமைந்துள்ளது.

யேசுநாதர் மனுக்குலத்தை பாவங்களிலிருந்து மீட்கவேண்டும் என்ற தனது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் தன்னையே தியாகமாகத் நமக்குத் தருகின்றார்.

இன்றைய நாளில் நாம் பாடுகளின் குருத்து ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். புனித வாரத்தின் நுழைவாயிலாக இருக்கும் இந்தப் பாடுகளின் குருத்து ஞாயிறு நமக்குச் பல செய்திகளை சொல்கின்றன.

ஆண்டு தோறும் விபூதிப் புதனும் குருத்துஞாயிறும் வந்து செல்கின்றன. நமது மனங்களில் மாற்றங்களை காண்கின்றோமா?

நமது வாழ்க்கைப் பாதையில் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்ற பல வினாக்களுக்கு நாம் விடைதேட வேண்டிய காலத்திலுள்ளோம்.

இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து, ஜெருசலேம் நகரில் வெற்றிவீராய்ப் பவனி செல்வதை நினைவுகூருகின்றோம். மக்கள் அனைவரும், ‘தாவீதின் மகனுக்கு ஓசன்னா’ என்று ஒலிவமரக்கிளைகளை உயர்த்தி வாழ்த்தொலி சொல்லி ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால், இந்த ஆர்ப்பரிப்பெல்லாம் சிறிதுநேரத்திலேயே மாறி, இயேசு மக்களின் கையில் ஒப்புவிக்கப்படுகின்றார். பின்னர் அவர்கள் மரணத் தீர்ப்புக்கு கையளிக்கின்றனர்.

இயேசுவின் வாழ்க்கையும் இன்பமும் துன்பமும் நிறைந்ததாக கடந்தது

நமது மனித வாழ்க்கையும் இப்படி இன்பமும் துன்பமும் நிறைந்துதான். இன்பம் வருகின்றபோது கடவுளை நினைக்காத நாம், துன்பம் வந்ததும், கடவுள் நம்மைக் கைவிட்டதாகப் புலம்புகின்றோம். மனிதராகப் பிறந்த யாருக்கும், அதுவும் இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவருக்கும் துன்பம் வரத்தான் செய்யும். ஆனாலும் நாம் மனவுறுதியோடும் இருக்கவேண்டும். யோவான் நற்செய்தியில் இயேசு இதைத்தான், “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவோடு இருங்கள்” என்று கூறுகின்றார் (யோவா 16:33). ஆகையால், நாம் இன்பமும் துன்பமும் நிறைந்த இவ்வாழ்க்கையில் இறைவன ;மீது பற்றுக்கொண்டு மனவுறுதியோடும் துணிவோடும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

இன்றைய இறைவார்த்தை, தந்தையின் திருவுளம் நிறைவேறுவதற்கு இயேசு தன்னையே தியாகம் செய்வதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது.

புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு, கடவுள் தன்மையில் விளங்கியதையும் தம்மையே வெறுமையாக்கியதையும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்குத் தாழ்த்திக் கொண்டதையும் எடுத்துக்கூறுகின்றது.

இயேசுவுக்கு, உலகை மீட்கவேண்டும் என்ற தந்தையின் திருவுளம் தான் கண்முன்னால் இருந்தது. அதனாலேயே இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதும் தான் தன்னுடைய உணவு (யோவா 4: 34) என்றும் வாழ்ந்துவந்தார்.

இயேசுத் எவ்வாறு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் தன்னைத் தியாகம் செய்தாரோ, அப்படி நாம் ஒவ்வொருவரும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே நாம் தியாகம் செய்யவேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தின் முந்தைய இறைவார்த்தையில் (பிலி 2:5) புனித பவுல், “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்” என்பார்.

இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக தன்னையே தியாகம் செய்தாரெனில், நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே தியாகம் செய்யவேண்டும். இதுதான் கிறிஸ்துவின் மனநிலையாகும்.

இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் தன்னையே தியாகம் செய்ததால், கடவுள் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அருளுகின்றார். அந்தப் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் என்கிறார் புனித பவுல். ஆம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவருக்கு அவர் தருகின்ற ஆசி அளப்பெரியது.

நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான், அது மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24) என்பார். அது போன்று தான் ஒருவர் கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்றால், அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றவேண்டும். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றும்பொழுது நிறையத் துன்பங்களும் சவால்களும் நம்முடைய வாழ்வையே தியாகம் செய்யவேண்டும் நிலையும் வரலாம். அவற்றையெல்லாம் செய்து நாம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் பொழுது கடவுளால் நிச்சயம் உயர்த்தப்படுவோம். ஆகவே, நாம் கடவுளால் உயர்த்தப்படவும் கடவுள் தருகின்ற ஆசியைப் பெறவும் இயேசுவைப் போன்று நம்மையே தியாகம் செய்ய முன்வருவோம்.

மானிடம் மாண்பு பெற தன்னையே ஆகுதியாக்கிய யேசுவின் வழியில் நாம் நடக்கின்றோமா? உலகில் கால் போன போக்கிலும் கண் செல்லும் திசையிலும் நமது வாழ்க்கையை ஊதாரித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?

நமது குழந்தைகள் இறையன்பிலும் ஆன்மீக வழியிலும் வளர்க்கப்படுகின்றார்களா, நாளைய உலகில் அவர்கள் சிறந்த கத்தோலிக்க பிரசைகளாக மிளர்வதற்கேற்ற வழிவகைகளை பெற்றோர்களாகிய நாம் வகுத்துக் கொடுத்துள்ளோமா?

இன்றைய கொரனோ தொற்றுக் காலகட்;டத்தில் உலகத்தின் ஓட்டமே சுருங்கிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நாம் பிறரன்புக் காரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு தன்னம்பிக்கையுடன் இறைவனின் கரம் பற்றி நடக்க நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோம்.

தந்தையின் திருவுளம் நிறைவேற இயேசு எப்படித் தன்னையே தியாகம் செய்தாரோ, அப்படி இந்த மானுடம் தழைக்க நம்மையே நாம் தியாகம் செய்வோம். அதன் வழியாக இந்த திருப்பாடுகளின் காலத்தில் இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

– RK

Leave A Reply

Your email address will not be published.